அருட்பணியில் சிறந்து விளங்குதல்
- Published in Tamil Devotions
விளையாட்டிலும், தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்குபவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் பெறுகின்றனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானத்தில் சிறந்து விளங்குவோர் நோபல் பரிசு மூலம் கவுரவப்படுத்தப்படுகின்றனர். கலை மற்றும் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவோர் புலிட்சர் பரிசுகளைப் பெறுகின்றனர். தேசிய அளவில் சிறந்த பங்களிப்புகள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களிலும், நிறுவனங்களிலும் கல்வியில் சிறந்து விளங்கும் திறமையான மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படுகிறது.
தேவனுடைய பணியில் சிறந்து விளங்கும் கிறிஸ்தவர்களுக்கு ஏதாவது விருதுகள் உள்ளதா? நமது உழைப்பு வெறுமையாய்ப் போகாது என்று வேதாகமம் கூறுகிறது. ‘ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.” (1கொரி 15:58). ‘மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக் கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான்” (1கொரி 3:8) என்று பவுல் கூறுகிறார். ஆகவே கிறிஸ்தவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்வதிலும், பரிசுத்தத்திலும் சிறந்து விளங்குவது மிக முக்கியமானது. ‘பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணரா யிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.” (மத் 5:48) என்று இயேசு கிறிஸ்து கூறினார். இயேசு கிறிஸ்துவின் மூலம் கிறிஸ்தவ ஊழியத்திலும், பரிசுத்தத்திலும் சிறந்து விளங்க முடியும் என்று பவுல் எழுதுகிறார். ‘என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற் றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலி 4:13). நமது ஆண்டவரின் பெலத்தால் நாம் சிறந்து விளங்க முடியும் என்பதால், ஊழியத்தில் சிறந்து விளங்கத் தேவையானவற்றை நாம் பார்ப்போம்.
1.எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமுள்ளவர்களாயிருக்க வேண்டும்:
இச்சையடக்கம் என்பது சுயக்கட்டுப்பாட்டை உடையவர்களாக வாழ்வது. உலகப்பிரகாரமான விருதுகளைப் பெறுவதற்காக, உடற்பயிற்சி செய்து, சுயக் கட்டுப்பாட்டை உடையவராக அழிந்து போகும் விருதுகளையே பெறுகிறார்கள். ஆனால் நாம் அழிவில்லாத ஜீவ கிரீடத்தைப் பெறுவோம் என்று வேதாகமம் கூறுகிறது. ஆகவே எல்லாவற்றிலும் சுயக் கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கப்படுகிறோம். ‘பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக் கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.” (1கொரி 9:25). நாம் நமது செயல், நடத்தை, விருப்பம், பழக்கவழக்கங்கள், பேச்சு மற்றும் சிந்தையிலும் கட்டுப்பாடு உடையவர் களாக இருக்கிறோமா?
2.சரீரத்தில் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும்:
பரிசு பெறத் தகுதியில்லாமல் போவதைத் தவிர்க்க பவுல் தன் சரீரத்தை ஒழுக்கத்துடன் வைத்து, அதை அடிபணிய வைப்பதாக எழுதுகிறார். ‘மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகா தபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.” (1கொரி 9:27). நமது சரீரமும், மனதும் தேவனுடைய வார்த்தையில் தடை செய்யப் பட்டுள்ள சிலவற்றைச் செய்ய வாஞ்சிக்கிறது. ஆகவே நம் சரீரத்தை ஒழுக்கப்படுத்தி, நமக்கு அடிமையாக்க அழைக்கப்படுகிறோம். பல கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்தாததால் தங்கள் சாட்சியை இழக்கின்றனர்.
3.மனப்பூர்வமாய் தேவனுக்கென்று வேலை செய்ய வேண்டும்:
எதைச் செய்தாலும், அதை மனப்பூர்வமாய் செய்தால் சுதந்திரமான பலனைப் பெறுவோம். ஏனென்றால் அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து விற்கு நாம் செய்யும் சேவையேயாகும். ‘நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து வைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர் களென்று அறிந்து, எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” (கொலொ 3:23,24). ஆகவே நம்முடைய ஊழியம் நமது முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும் செய்யப்பட வேண்டும். அது மனிதரைப் பிரியப்படுத் துகிறதாக இருக்கக் கூடாது.
4.நல்ல போராட்டத்தை உண்மையுடன் போராட வேண்டும்:
பவுல் தன்னுடைய உண்மையுள்ள கிறிஸ்தவ வாழ்வில் மனநிறை வுள்ளவராய், தனது வாழ்வின் இறுதியில் பெறப்போகும் பரிசை நோக்கிக்கொண்டிருந்தார். ‘நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திர மல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தரு ளுவார்.” (2தீமோ 4:7,8). பவுல் ஊழியத்தில் உண்மையாய்ப் போராடி ஓட்டத்தை முடித்தார். தனது ஊழியத்திலும் அவர் மன நிறைவுள்ள வராயிருந்தார். ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் உண்மையும் உத்த முமாக ஊழியம் செய்ய உதவி செய்வாராக.
5.அழைப்பின் பந்தையப் பொருளை நோக்கி ஓட வேண்டும்:
தேவன் நம் ஒவ்வொருவரையும் அழைத்திருக்கிறார். நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் அல்லது இலக்கு இருக்க வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அந்த இலக்கை நோக்கி ஒட வேண்டும். இலக்கின்றி ஓடாமல் பவுல் கூறுவதைப்போல ‘சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” (பிலி 3:13,14). தேவன் தாமே நமது தோல்விகளையும், பலவீனங்களையும் மறந்து, நம்மை அழைத்த அழைப்பின் நோக்கம் நிறைவேற நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.
(Dr. C Barnabas, Translated from True Discipleship March 1996)