பாவ மன்னிப்பு
- Published in Tamil Devotions
ஒரு சபையில் நடந்த வாலிபர் முகாமில், அலுவலகத்தில் பணியாற்றும் பட்டதாரி ஒருவர் பிரசங்கியாரிடம் வந்து, ‘என்னுடைய இரட்சிப்பிற்குப் பின் நான் பல பாவங்களைச் செய்து, அதன் பின் அறிக்கை செய்து விட்டேன். என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் நான் செய்த பாவங்களை நினைக்கும்போது சில சமயம் குற்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகிறேன். என்னுடைய கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று எப்படி நிச்சயமாக நம்ப முடியும்?” என்று கேட்டார்.
பல விசுவாசிகள் குற்ற உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டு, பாவ மன்னிப்பின் நிச்சயம் இல்லாமல் வாழ்கின்றனர்.வாலிபர்கள் பாவ மன்னிப்பைக் குறித்து எழுப்பிய சில கேள்விகளைக் கீழே காணலாம்.
> தேவன் என் பாவங்களை மன்னித்தார் என்று நான் எப்படி நிச்சயிக்க முடியும்?
> நான் விசுவாசியாக மாறிய பின்பு பயங்கரமான பாவங்களைச் செய்துள்ளேன். தேவன் என்னை மன்னித்து ஏற்றுக்கொள்வாரா?
> நான் ஒரு பாவத்தை பல முறை செய்து கொண்டிருக்கிறேன். ஓவ்வொரு முறையும் தேவன் என்னை மன்னிப்பாரா?
> நான் என் பாவத்தை அறிக்கை செய்து விட்டேன். ஆனால் பாவம் மன்னிக்கப்பட்ட உணர்வு என்னிடம் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
> ஆண்டவர் என் பாவத்தை மன்னித்தார் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் என்னை என்னால் மன்னிக்க முடியவில்லை. இந்த குற்ற உணர்விலிருந்து எவ்வாறு விடுபட முடியும்?
> என் பாவங்கள் எனக்கு மன்னிக்கப்பட்டது என்று அறிந்திருக்கிறேன். கிறிஸ்து அதற்கான விலைக்கிரயத்தைச் செலுத்திவிட்டார். பின் ஏன் என் கடந்த கால பாவத்தின் விளைவுகளை அறுக்க வேண்டும்?
உங்களிடமும் இதுபோன்ற கேள்விகள் இருக்கலாம். பாவ மன்னிப்பைக் குறித்து வேதாகமம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்.
1.பாவ மன்னிப்பிற்கான தேவனின் உத்திரவாதம்:
‘வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்” (ஏசா 1:18). ‘நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங் களை நினையாமலும் இருப்பேன்” (ஏசா 23:25). ‘நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்” (எரே 31:34). ‘நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத் திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்” (மீகா 7:19). ‘மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்” (சங் 103:12). ‘அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோவான் 1:7).
2.பாவத்தை அறிக்கையிடும்போது பாவ மன்னிப்பிற்கான தேவனின் வாக்கு:
‘நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9). ‘தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி 28:13). ‘துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக் கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்” (ஏசாயா 55:7). ‘உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத் தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்” (ஏசா 44:22). ‘நான் என் அக்கிர மத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங் 32:5).
இந்த வசனங்களில் தேவன் பாவங்களை அறிக்கையிடும்போது எல்லாப் பாவங் களையும் மன்னிக்க வாக்கு அருளியுள்ளார். நமது பாவங்களை மன்னியாமல் இருப்பாரோ?
3.பாவ மன்னிப்பிற்கான வேதாகம உதாரணங்கள்:
> தாவீது இராஜா விபசாரமும், கொலையும் செய்தார். அவர் தன் பாவத்தை அறிக்கையிட்டபோது, மன்னிக்கப்பட்டார். (சங் 32:25, 2சாமு 12:13).
> இஸ்ரவேலர் வேண்டுமென்றே தேவனின் உடன்படிக்கையை முறித்தனர். மோசே அவர்களுக்காக ஜெபித்தபோது, தேவன் அவர்களை மன்னித்தார்.
> நினிவே மக்கள் துன்மார்க்கத்தால் தேவனின் தீர்ப்புக்குட்பட்டனர். ஆனால் அவர்கள் உபவாசித்து ஜெபித்து, மனந்திரும்பினபோது, தேவன் அவர்களை அழிக்கவில்லை.
> சிம்சோன் பரிதாபமாகத் தேல்வியடைந்தான். ஆனால் தேவன் அவனுடைய ஜெபத்தைக் கேட்டு அவனை மன்னித்தார். (நியா 16:28-31).
> பேதுரு இயேசு கிறிஸ்துவை மறுதலித்தார். தன் பாவங்களுக்காக மனங்கசந்து அழுதபோது மன்னிக்கப்பட்டு, தேவனால் பெரிதும் பயன்படுத்தப்பட்டார்.
4.திரும்பத் திரும்ப செய்யும் பாவத்தைக் குறித்த இயேசுவின் போதனை:
‘அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்” (மத் 18:21,22). ‘கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்” (சங் 103:8,10). ‘நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக் கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவரா யிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரிய மாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபி 4:15,16).
5.பாவ மன்னிப்பைக் குறித்த வேதத்தின் போதனை:
ஒருவன் பாவம் செய்யும்போது தேவனுடைய தீர்ப்புக்கும், கோபாக்கினைக்கும் உட்படுகிறான். தேவனோடு இருந்த ஐக்கியத்தை இழந்துபோகிறான். ஆனால் அவன் பாவத்தை அறிக்கை செய்யும்போது, ‘ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிற வராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங் களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1யோவான் 2:1,2). ஆகவே நாம் நம் பாவங்களை அறிக்கையிடும்போது இரண்டு வகையான மன்னிப்பைப் பெறுகிறோம்.
i.நீதியான மன்னிப்பு: நமது தேவன் நீதியுள்ள தேவன். ஆகவே அவர் பாவியைத் தண்டிக்க வேண்டும். ஆனால் பாவியான மனுஷன், தன் பாவத்தை அறிக்கையிடும்போது, நீதியுள்ள தேவன் கிறிஸ்து கல்வாரியில் செய்த செயலால் பாவத்தை மன்னிக்கிறார். ‘இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்”; (ரோமர் 3:24-26). ‘பாவி தன் பாவத்திற்காகத் தண்டிக்கப்படுவதில்லை. ஏனென்றால் இயேசு கிறிஸ்து அவனுக்காகப் பாவமானார்”; (2கொரி 5:21).
ii.பெற்றோரின் மன்னிப்பு: பாவத்தினால் துண்டிக்கப்பட்ட ஐக்கியம், கெட்ட குமாரனைப் போல பாவத்தை அறிக்கை செய்யும்போது, மீண்டும் உறவு சரியாக்கப்படுகிறது. (1யோவான் 1:5-9).
ஆகவே பரிசுத்த வேதாகமம் பாவ மன்னிப்பைப்பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்குத் தெளிவான போதனைகளின் மூலம் பதில் அளிக்கிறது.
(Dr. C Barnabas, Translated from True Discipleship July 1994)