பயத்தை மேற்கொள்ள ஏழு படிகள்

By C Barnabas

ஒரு மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளிடம் பயத்தைக் குறித்து ஒரு ஆராய்ச்சி செய்தார். வாலிபர் எதிர்காலத்தைப்பற்றி பயப்படுவதாக அவர் கண்டறிந்தார். திருமணமான தம்பதியர் தங்கள் பிள்ளைகளைக் குறித்தும், அவர்கள் நலம் குறித்தும் பயப்படுகின்றனர். வயதானவர்கள் தங்கள் உடல் நலன் குறித்தும், எதிர்காலத்தைக் குறித்தும் பயப்படுகின்றனர்.

எல்லா மனிதரும் பயத்தின் வழியாகக் கடந்து செல்லுகின்றனர். பயத்தை மேற்கோள்ள தீர்வுகள் என்ன?

 

1.தேவன் மேல் நம்பிக்கை:

பயம் நம்மைத் தாக்கும்போது முதலாவது அந்த பயத்தை மேற்கொள்ள தேவனை நம்புவோம்;. பயம் கவலையைக் கொண்டுவரும். அது எதையும் சரி செய்யாது. பயத்தின் வழியாகக் கடக்கும்போது, ‘தேவனுடைய உதவியோடு நான் இந்த பயத்தை மேற்கொள்ளுவேன்” என்று கூறுவோம். நாம் தேவனுடைய பிள்ளை. தேவன் நம் மேல் அக்கறை உள்ளவர். நாம் அவருக்கு விசேஷ மானவர்கள். ஆகவே தேவனை நம்பி பயத்தை தேவனிடம் கொடுத்துவிடுவோம்.
பயத்திற்கு இடம் கொடாதிருப்போம். இருண்ட நேரத்திலும் தேவனை நம்புவோம். அவர் எல்லாவற்றையும் சரியாகச் செய்வார் என்று நம்புவோம். தேவனை அறிவதாலும், நல்ல ஈவுகளைக் கொடுக்கும் நல்ல தேவனை நம்புவதாலும் அந்த நம்பிக்கை வரும். ‘அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” (யோபு 13:15) என்று யோபு கூறுகிறார்.
தேவன் மேல் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொண்டபோது, நமக்கு எதிராக எது வந்தாலும் நாம்; பயப்படமாட்டோம். சங்கீதக்காரனைப் போல நாமும் பயத்தை வென்று, ‘உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக” என்று கூறலாம்.

2.தேவனுடைய வார்த்தையைப் படித்து, தியானிக்க வேண்டும்:

பயத்தை மேற்கொள்ள அடுத்த படி, தேவனுடைய வார்த்தையைப் படித்து தியானித்தல். தேவனுடைய வார்த்தை எதிராளியைத் தாக்கும் பயனுள்ள ஆயுதம் என்று வேதாகமம் கூறுகிறது. ‘தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்” (எபே 6:17). நாம் இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தினால் பயம் காணாமல் போய்விடும். எவ்வாறு தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்த முடியும் என்று கேட்டால், தேவன் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை மனப்பாடம் செய்து பயப்படும்போது வாயைத் திறந்து சத்தமாகக் கூறலாம். உடனே பயம் நீங்கி நம்பிக்கை வருவதை உணர முடியும்.
ஆண்டவருடைய வார்த்தை தேவனுடைய சிந்தையை நம்மிலே உருவாக்கும். தேவன் ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்பவர். அவர் நமக்குப் பயமுள்ள ஆவியைத் தருபவர் அல்ல. பயம் சாத்தானிடமிருந்து வருகிறது. வீரமும் தைரியமும் உள்ள ஆவி தேவனிடத்திலிருந்து வருகிறது. ஆண்டவருடைய போதனைகளை நாம் பின்பற்றி, இயேசுவை நம் வாழ்க்கையின் ஆண்டவராக இடம் கொடுத்தால், எல்லா சூழ்நிலைகளிலும் சமாதானத்தோடு வாழ முடியும்.

3.ஜெபிக்க வேண்டும்:

தேவனுடைய மனிதர், பயத்தையும், கவலையையும் மேற்கொள்ள இந்த கருவியையே நம்பி வாழ்ந்தனர். பயத்தின் மத்தியில் அவர்கள் ஜெபிக்கும்போது, தேவன் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு, அவர்களின் பயத்தை மேற்கொள்ள கிருபை செய்தார். தேவன் நம்மை விசாரிக்கிறவரானபடியால், ஜெபித்து நம் பயத்தை தேவனிடத்தில் கொடுத்துவிடுவோம். பயமும் கவலையும் நம் உடல் நலத்தைக் கெடுத்துவிடும். ஜெபம் செய்து தேவனிடத்தில் நம் பாரத்தை வைத்துவிடுவோம். பின்பு ஆண்டவரைத் துதித்து, அவருடைய வாக்குத்தத்தத்தை உரிமை பாராட்டுவோம். நடைமுறையில் ஜெபமே பயத்தை நீக்கும் சிறந்த மருந்தாகும்.

4.தேவனுடைய மகத்துவத்தை நினைக்க வேண்டும்:

இயற்கையைப் பார்க்கும்போது அதை உண்டாக்கின தேவனை நினைத்து அவர் நமக்காகப் பரலோகத்தில் ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தியுள்ளார் என அறிகிறோம். நம் பயத்தைவிட தேவன் எவ்வளவு பெரியவர் என்பதைப் புரிந்துகொள்ளும்போது பயத்தின் மேல் இருந்த கவனம் போய், பயத்தை நீக்கும் தேவனையும் அவரின் வல்லமை மேலும் கவனம் திரும்பும். மனிதர்கள் நான்கு காரியங்களுக்குப் பயப்படுகிறார்கள். மனிதனைக் குறித்த பயம், மரணத்தைக் குறித்த பயம், உடல் நலத்தைக் குறித்த பயம் மற்றும் எதிர்காலத்தைக் குறித்த பயம் ஆகும். விசுவாசிகள் இந்த பயங்களின் நிமித்தம் கவலைப்பட்டு கலங்க வேண்டாம். ஏனென்றால் தேவன் இந்த பயங்களின் மேல் அவரின் மரணத்தின் மூலம் வெற்றி சிறந்தார். தேவனுடைய மகத்துவங்களை நினைக்கும்போது இந்த பயங்கள் எல்லாம் காணாமல் போய் விடும். ஏனென்றால் தேவன் பெரியவர், வெற்றிகொள்ளச் செய்பவர்.

5.பயத்தின் மீது கவனம் செலுத்தாமல், தேவன் மீது கவனம் செலுத்த வேண்டும்:

பயத்தினால் பிடிக்கப்பட்ட மனிதன், பயத்தையே கவனிப்பான். ஆனால் பயத்தைப் பார்த்தால் பயம் நீங்காது. தேவனை நோக்கிப் பார்ப்போம். பேதுரு இயேசுவை நோக்கிப் பார்த்தபோது தண்ணீரின் மேல் நடந்தார். ஆனால் தண்ணிரின் மேல் கவனம் வந்தபோது, மூழ்குவேனோ என்று எண்ணிய போது மூழ்கத் தொடங்கினார். பயம் வரும்போது தேவனை நோக்கிப் பார்ப்போம். பயத்தை நோக்க வேண்டாம்.

6.பயத்தை விசுவாசத்தால் ஒழிக்க வேண்டும்:

‘ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” (மத் 10:28-31). பயத்திற்குப் பதிலாக விசுவாசம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று இந்த வசனங்கள் விளக்குகிறது. தேவனை விசுவாசித்தால் பயத்தை வெற்றிகொள்ள முடியும்.

7.சூழ்நிலைகளை மாற்றி தேவன் பயத்தை நீக்க முடியும்:

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங் 55:22) என்று வேதாகமம் நீதிமான்களை அழைக்கிறது. ஆகவே நம்முடைய பயங்களையும் அவரிடம் கொடுத்து விடுவோம். அவர் நமக்கு வெற்றியை, தான் வாக்களித்தபடி தருவார். ‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” (1பேதுரு 5:7). நம்முடைய பயங்களை நீக்கி சூழ்நிலைகளை மாற்றுவார்.

(Dr. C Barnabas, Translated from True Discipleship May-June 2008)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment