அமைதி வேளையின் முக்கியத்துவம்
- Published in Tamil Devotions
நாம் பொதுவாக சில நிகழ்வுகளை பல ஆண்டுகளாக நினைவில் வைத்திருப்போம். நான் ஒரு முறை ஒரிசாவில் உள்ள மிஷனரி களத்தில் என்னுடைய நண்பருடன் தங்கியிருந்தபோது நடந்த நிகழ்வை என்னால் மற`க்க முடியாது. என்னுடைய நண்பர் அவருடைய நிறுவனத்தின் தலைவராயிருந்தார். அவருடன் ஒரு பெரிய குழு வேலை செய்தது. அவர் கடினமான பொறுப்புகளை நாள் முழுவதும் செய்தார். அவருடன் நான் தங்கியிருந்தபோது அவர் ஆண்டவருடன் தினமும் செலவழித்த நேரம் எனக்குச் சவாலாக இருந்தது.
அவருடன் நான் தங்கியிருந்தபோது, அவர் தினமும் காலை 5 மணிக்கு எழும்புவதை நான் கண்டேன். அவர் தேவனுடைய வார்த்தையை தினமும் கிரமமாக வாசித்து, அந்தப் பகுதியைத் தியானம் செய்தார். அவர் தினமும் மற்றவர்களுக்காக ஒரு ஜெப நாட்குறிப்பை வைத்து ஜெபம் செய்தார்.
அவர் எதனால் இவ்வாறு கிரமமாக அமைதி வேளையை கடைப்பிடிக்கத் தொடங் கினார் என்பதை அறிய, ‘எப்போது இவ்வாறு கிரமமாக அமைதி வேளையை கடைப்பிடிக்கத் தீர்மானம் செய்தீர்கள். தினமும் ஒரு மணி நேரம் ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் செலவு செய்ய உங்களை ஊக்கப்படுத்தியது எது?” என்று அவரிடம் கேட்டேன். அவர் ஒரு கல்லூரியில் வேலை செய்தபோது நிகழ்ந்த நிகழ்வை விவரித்தார்.
அந்த சமயம், அவர் கல்லுரி மாணவர்களுக்கு ஒரு முகாமை ஏற்பாடு செய்து, ஒரு பேச்சாளரை அந்த முகாமிற்கு அழைத்தார். அந்த பேச்சாளர் அவருடைய வீட்டிற்குக் காலையில் 4.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்றுத் தன்னுடைய வீட்டிலிருந்த விருந்தினர் அறையில் தங்க வைத்து, பின் தன்னுடைய படுக்கை அறைக்குச் சென்றார். அவரால் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் பேருந்தில் பயணம் செய்து வந்த பேச்சாளர் ஜெபம் செய்வதை அவரால் கேட்க முடிந்தது. அவருக்குத் தினமும் அதிகாலை எழுந்து ஜெபம் செய்யும் பழக்கம் இல்லாததால் அவர் திடுக்கிட்டார்.
‘இந்த பேச்சாளரைப் பார். அவர் இரவு முழுவதும் பயணம் செய்திருக்கிறார். இப்போது ஜெபம் செய்கிறார். நான் அவரை என்னுடைய ஊழியத்தில் பயன்படுத்துவதில் வியப்பொன்றும் இல்லை. ஏன் நீ இந்த பேச்சாளரை ஒரு மாதிரியாக வைத்து என்னோடு நேரம் செலவழிக்கக் கூடாது” என்று ஆண்டவர் இவரோடு பேசினார். அந்த நாளில், என்னுடைய நண்பர் தினமும் அதிகாலையில் எழுந்து, ஒரு மணி நேரம் ஜெபத்திலும், வேதத்தை படிப்பதிலும் செலவழிக்கத் தீர்மானம் செய்தார்.
அமைதி வேளையை ஒழுங்காகக் கடைப்பிடித்தார். இந்தப் பழக்கத்தை அவர் தினமும் கடைப்பிடித்தபோது, அவருடைய வாழ்க்கை மாறியது. ஆண்டவர் அவரை ஆயிரக்கணக்கான மிஷனரிகளுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் ஆசீர்வாதமாகப் பயன்படுத்தினார்.
‘அமைதி வேளை ஒவ்வொரு விசுவாசிக்கும் தலைவனுக்கும் முக்கியமானது என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன். ‘அது அனைத்து விசுவாசிகளுக்கும் இன்றிமையாதது” என்று கூறினார். பின்பு அவர், சென்ற வருடத்தில் நடந்த மிஷனரி தலைவர்கள் மற்றும் போதகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டவரின் நிலையைக் கூறி வருந்தினார். ‘நான் ஒரு மிஷனரி மாநாட்டில் சென்ற வருடம் கலந்து கொண்டேன். இந்தியாவின் பல இடங்களிலும் இருந்து தலைவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன். அநேகர் அமைதி வேளையைக் கடைப்பிடிப் பதை நான் காணவில்லை. பலர் காலையில் தாமதமாக எழுந்து, குளித்து, நேராகக் கூட்டத்திற்குச் சென்றனர். ஆண்டவரோடு அவர்கள் நேரம் செலவழிக்க வில்லை. அவர்கள் எவ்வாறு ஊழியம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆண்டவர் எவ்வாறு அவர்களின் ஊழியத்தை ஆசீர்வதிப்பார்?”
வேதாகமம், விசுவாசிகள் தினமும் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்க வேண்டும் என்று கூறுகிறது. பல மனிதர்கள் தேவனோடு தனியாக நேரம் செலவழித்த உதாரணங்களைக் கூறுகிறது. நாம் வேதாகமத்திலிருந்து எவ்வாறு இயேசு கிறிஸ்துவும் மற்றவர்களும் தேவனோடு நேரம் செலவு செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்று பார்ப்போம்.
1.இயேசு அதிகாலையில் இருட்டோடே எழுந்து வனாந்தரமான இடத்திற்குப் போய் ஜெபம்பண்ணினார்:
வேதாகமத்தில், ‘அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தர மான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.” (மாற்கு 1:35). அவரைக் காண பல மக்கள் தேடினாலும், பல இடங்களில் அவர் பிரசங்கம் செய்ய இருந்தாலும் அதிகாலையில் அவர் ஜெபித்தார்.
2.இயேசு சீடர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் ஜெபம்பண்ணினார்:
சீடர்களைத் தேர்ந்தெடுக்கும் முன் இயேசு கிறிஸ்து இரவு முழவதும் ஜெபம் பண்ணினார். (லுக்கா 6:12-19). தன்னைக் கிறிஸ்து என்று தன்னுடைய சீடர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு முன் அவர் தனியாக ஜெபம்பண்ணினார்.
3.இயேசு ஜெபம்பண்ண ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றார்:
அவர் வழக்கமாக ஜெபம்பண்ணும் இடம் ஒரு மலையாகும். (மாற்கு 6:46). அவர் ஜெபம்பண்ண மலைகளைத் தேர்ந்தெடுத்தார். ‘அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண் ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.” (லூக்கா 6:12,13). ‘அவர் ஜனங்களை அனுப்பி விட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமான போது அங்கே தனிமையாயிருந்தார்.” (மத் 14:23).
4.ஜெபம்பண்ணுவது இயேசு கிறிஸ்துவின் வழக்கமாக இருந்தது:
ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு ஜெபம்பண்ண இயேசு மீண்டும் மீண்டும் சென்றார். இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் வழக்கமாகவும், தொடர்ந்தும் ஜெபம்பண்ண ஒலிவமலைக்குச் சென்றனர். ‘பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின் படியே ஒலிவமலைக்குப் போனார்; அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள்.” (லூக்கா 22:39).
5.அவருடைய சீடர்கள் தூங்கினாலும் இயேசு ஜெபம்பண்ணினார்:
அந்த நேரம் ஆண்டவருடைய தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினார். (லூக்கா 22:43). அவர் காட்டிக்கொடுக்கப்படுவதற்கு முன் தன் சீடர்களுடன் ஒலிவ மலைக்குச் சென்று, ‘அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொன்னார்” (லூக்கா 22:40). பின்பு அவர் தனியாகச் சென்று வேதனையுடன் ஜெபம்பண்ணினார். ஆனால் சீடர்கள் துங்கினர். இயேசு கிறிஸ்து திரும்பி வந்தபோது பேதுரு தூங்குவதைக் கண்டார். ‘பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.” (மாற்கு 14:37,38).
6.பேதுரு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மேலறைக்குச் சென்று ஜெபம்பண்ணினார்:
‘பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.” (அப் 10:9). அந்த நேரத்தில் சுவிசேஷத்தைப் புறஜாதியாருக்குப் பிரசங்கிக்க தரிசனம் பெற்றார். அவருடைய பிரசங்கத்தால் புறஜாதிகள் சபையில் முதலாவதாகச் சேர்க்கப்பட்டனர். (அப் 10:10-48).
7.பவுல் மூன்று நாட்கள் எந்த உணவும் உட்கொள்ளாமல் ஜெபம்பண்ணினார்:
தமஸ்குவுக்குச் செல்லும்வழியில் பவுல் ஆண்டவரைச் சந்தித்தார். தமஸ்குவிற்குச் சென்ற பின் மூன்று நாள் புசியாமலும் குடியாமலும் ஜெபம்பண்ணினார். (அப் 9:9,11). அந்த நேரத்தில் அவர் தரிசனம் கண்டார். அழைப்புப்பெற்று பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு ஜெபஆலயங்களில் இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று பிரசங்கம் செய்தார். (அப் 9:10-20).
8.ஆபிரகாம் அதிகாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேவனுக்கு முன்பாக நின்றார்:
‘விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற் குப் போய்” (ஆதி 19:27). ‘தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும் போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப் போகும்படி அனுப்பிவிட்டார்” (ஆதி 19:29).
9.தாவீது ராஜா அதிகாலையில் ஆலயத்தில் ஆண்டவரைத் தேடினார்:
‘தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” (சங 63:1) என்று தாவீது ஜெபம்பண்ணினார். ஆண்டவரைத் தேடினபோது, தாவீது தேவனின் பலத்தையும் மகிமையையும் கண்டார். (சங் 63:2). தாவீது தேவனோடு நேரம் செலவழிக்க ஏங்கினார். தேவனோடு நேரம் செலவழித்தபோது தேவனுடைய பலத்தையும் வல்லமையையும் அனுபவித்தார்.
10.தானியேல் மேலறையில் தினமும் மூன்று முறை முழங்காலில் நின்று ஜெபம்பண்ணினார்:
ராஜா எந்த தெய்வத்திடமும் ஜெபம்பண்ணக்கூடாது என்று ஆணை பிறப்பித்தார். மீறினால் சிங்கக் கெபியில் போட ஆணையிட்டார். அந்த ஆணை கையெழுத் தானது தெரிந்தும் தானியேல் தேவனோடு செலவிடும் நேரத்தை நிறுத்தவில்லை. அவர் தனது வீட்டிலிருந்த மேலறைக்குச் சென்று ஜன்னல்களைத் திறந்து வைத்து ஆண்டவரிடம் மூன்று வேளை ஜெபம் செய்தார். ‘தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக் குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.” (தானி 6:10). தேவன் தன் தூதரை அனுப்பி சிங்கங்கள் அவனைத் தாக்காதபடி அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார். (தானி 6:22).
தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட மனிதர்கள் தேவனோடு நேரம் செலவழித்தனர். விசுவாசிகளுக்கு ஜெபம் மிக முக்கியமானதாக இருக்கும்போது அவருடைய ஊழியத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஜெபம் மிக முக்கியமானதல்லவா?
று டியுவெல் (று னுரநறநட) ‘தேவனால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட மக்கள், தங்கள் சொந்த ஆத்துமாவுக்கு புதிய ஆவிக்குரிய புத்துணர்ச்சி, அல்லது தங்கள் ஊழியம் அல்லது தங்கள் மக்களைப் பற்றிய தேவனின் சிறந்த வழிகாட்டுதலுக்காக அவருடன் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது அவசியம் என்று அடிக்கடி கண்டறிந்துள்ளனர்” என்று ஊழியர்களைக் குறித்து எழுதுகிறார்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Jan-Feb 2009)