தேவனை எல்லாக் காரியங்களிலும் நம்புதல்

By C Barnabas

ஒரு முறை ஒரு அதிகாரி வேத ஆராய்ச்சியில் கலந்து கொண்டார். அந்த ஆராய்ச்சியின் இறுதியில் ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நீ நம்பலாம்” என்று அந்த வேத ஆராய்ச்சியை நடத்திய தலைவர் கூறினார். ஆழமாகத் தொடப்பட்டவராய் அந்த அதிகாரி அந்தக் கூடுகையை விட்டுச் சென்றார். அவர் வீட்டிற்குச் செல்லும்போது ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நம்பலாம்” என்ற சொற்கள் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்தன.

அநேக நாட்களாக அவர் முழு நேரப் பணியைத் தொடர முனைந்தாலும், தனது வேலையை விட்டு வரத் தயங்கினார். பாதுகாப்பு போய் விடுமோ என்று பயந்தார். தேவன் தனது தேவைகளைச் சந்தித்து தனது மனைவி, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வாரா என்று யோசித்தார். ஆனால் ‘உனக்காக மரித்த உன் இரட்சகரை நம்பலாம்” என்ற வார்த்தைகள் அழுத்தமாக வருவதை உணர்ந்தார். வீட்டிற்குச் சென்று ஜெபித்து, தன் வாழ்க்கையை முழு நேரப் பணிக்காக ஒப்புக் கொடுத்தார்.

அடுத்த மாதத்தின் கடைசியில் அவர் ரோமருக்கு எழுதிய நிருபத்தை வாசித்த போது, இரட்சகரை எல்லாவற்றிற்;கும் நம்புவதின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டார். ‘தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?” என்று ரோமர் 8:32 கூறுவதை நம்பினார். வருங்காலத்தைக் குறித்த அவருடைய பயம் மறைந்து போனது. தனது தேவையை மட்டு மல்லாது, தனது குடும்பத்தின் தேவைகளையும் சந்திக்க தேவனை நம்பலாம் என்று புரிந்துகொண்டார். அடுத்த மாதம் தனது வேலையை விட்டு தேவனைச் சேவிக்க முனைந்தார். பின்னர் தேவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, நம்பத்தகுந்த வராக இருக்கிறார் என்று புரிந்து கொண்டார். ஆம், நீ உனக்காக மரித்த உன் இரட்சகரை நம்பலாம். தனது சொந்தக் குமாரனென்றும் பாராது உனக்காக சிலுவையில் மரிக்க ஒப்புக்கொடுத்த தேவனை நீ நம்பலாம்.

நான் மாணவனாக, பல பிரச்சனைகள் மத்தியில் கடந்து செல்லும்போது, என்னைப் பின்வரும் பல்லவி உற்சாகமூட்டியது. இந்தப் பல்லவியை அர்த்தத்தோடு பாடும்போது அநேக நேரங்களில், அமைதியையும், மகிழ்ச்சியையும் நான் அடைந்ததுண்டு.

“இயேசுவை நம்பிக்கொண்டிரு, உன்னைக் கைவிடாரே, துன்பம் துயரம்யாவிலும் உன்னைத் தற்காப்பாரே, சந்தோஷ நாளிலும், சஞ்சல நேரத்திலும், என்றுமே எங்குமே, துதி பாடுவோம”;.

(Dr. C Barnabas, Translated from True Discipleship May 1998)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment