நீங்கள் வயதாகும்போது கவலைப்படக்கூடாது
- Published in Tamil Devotions
ஒருமுறை வயது முதிர்ந்த தம்பதியுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் திருச்சபை பணியில் பல ஆண்டுகளாக ஈடுபாடு கொண்டிருந்தனர். திருமணத்திற்குப் பின் அவர்களின் பிள்ளைகள் வௌ;வேறு இடங்களில் குடியேறினதால் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் எதிர்காலத்தைக் குறித்துக் கேட்டபோது மரண பயம் அவர்களிடம் இருப்பதாகக் கூறினர். அவர்கள் மரணத்திற்கு ஆயத்தமாக இல்லை.
மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி வேதாகமத்தின் போதனையையும், எவ்வாறு இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டு ஆயத்தமாகலாம் என்றும் அவர்களுக்கு விளக்கிக் காட்டினேன். அவர்கள் ஜெபித்து தங்கள் வாழ்க்கையை இயேசு கிறிஸ்துவிடம் அர்ப்பணித்தனர்.
இந்த வயது முதிர்ந்த தம்பதியரைப்போல் இன்றும் மரணபயத்துடன் அநேகர் வாழ்கின்றனர். அவர்கள் மரணத்திற்குப் பின் வரும் வாழ்க்கைக்கு ஆயத்தமற்றவர்களாக வாழ்கின்றனர். விசுவாசிகள் உட்பட அநேக மக்கள் மரணத்திற்குப் பயப்படுகின்றனர். சிலர் கடைசி காலத்தில் வியாதிப்பட்டு மற்றவர்களுக்கு ஒரு பாரமாக மாறிவிடக் கூடாதென்று பயப்படுகின்றனர். சிலர் தங்கள் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ கஷ்டப்படுவார்கள் என்று பயப்படுகின்றனர். ஆகவே வயதாகும்போது மரணத்தையோ, எதிர்காலத்தையோ யோசித்து பயப்படாமல் இருக்க சில காரியங்களை நாம் பார்ப்போம்.
1.தேவன் வயதான காலத்தில் உங்களைப் பார்த்துக்கொள்வேன் என்று வாக்குரைத்திருக்கிறார்:
ஒரு விசுவாசி அறுபது வயiது அடைந்தபோது எதிர்காலத்தையும், உடல் சுகத்தையும் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்தார். பல வியாதிகளையுடைய வயது முதிர்ந்தவர்களைக் கண்டபோது, அவர்களைப்போலவே தானும் நோய்வாய்ப்பட்டு மரித்துவிட நேரிடுமோ என்று பயந்தார். அந்த நாளில் அவர் ஏசாயா 46 ஆம் அதிகாரத்தை வாசித்தார். ‘யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.” (ஏசா 46:3,4). இந்த வசனத்தின் மூலமாக ஆண்டவர் அவரோடு பேசினார்.
இம்மட்டும் ஏந்தி வந்த ஆண்டவர் இனிமேலும் அவரை ஏந்தி, சுமந்து கடைசி மட்டும் தப்புவிப்பார் என வாசித்தபோது வியந்துபோனார். அந்த அதிகாரத்தை மேலும் வாசித்தபோது, மக்கள் மற்ற தேவர்களைச் சுமந்து செல்வதைக் கண்டார். ஆனால் கருவிலிருந்து சுமந்த தேவன், அவரை தொடர்ந்து சுமந்து, கடைசிவரை தப்புவிப்பதாக வாக்குபண்ணியுள்ளார். எதிர்காலத்தைக் குறித்துப் பயப்படும் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியமான வாக்குத்தத்தம்.
2.தேவன் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் உங்களோடு இருப்பேன் என்று வாக்குரைத்திருக்கிறார்.
இந்த உலகில் அனைத்து மனிதரும் கடந்து செல்ல வேண்டிய பள்ளத்தாக்கு மரணம். ஆனால், ஆண்டவர் விசுவாசிகளோடு அந்த பள்ளத்தாக்கின் மத்தியில் கடந்து செல்லும்போது, அவர்களோடு இருந்து அவர்களைத் தேற்றுவது எவ்வளவு பெரிய சிலாக்கியம். தேவனோடு மரணத்தைக் கடந்து செல்வது என்பது எவ்வளவு அதிசயமான அநுபவம். ‘நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” (சங் 23:4).
3.நீங்கள் இயேசுவோடு எப்போதும் இருப்பீர்கள்.
எல்லா விசுவாசிகளும் தங்கள் மரணத்திற்குப் பின் ஆண்டவரோடு இருப்பார்கள் என்று வேதாகமம் போதிக்கிறது. நமது மரணத்திற்குப் பின் தேவனோடு வாழுவது எவ்வளவு பாக்கியமானது. ‘நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.” (2கொரி 5:8) என்று பவுல் எழுதுகிறார். ‘அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.” (1தெச 4:13,14,17).
4.இயேசு உங்களை மரண பயத்திலிருந்து விடுதலை செய்துள்ளார்.
‘ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.” (எபி 2:14,15). ‘அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” (1கொரி 15:54,55). ‘இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.” (யோவான் 11:25,26).
5.மரணம் வாழ்க்கையின் முடிவு அல்ல – நீங்கள் மரணத்திற்குப் பின் என்றென்றும் பரலோகத்தில் இருப்பீர்கள்.
‘இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாக கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.” (2தீமோ 4:8). ‘எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.” (1கொரி 2:9,10).
6.பரலோகத்திலே துக்கமோ, கண்ணீரோ இல்லை.
துக்கமோ, பயமோ இல்லாத இடத்தில் இருக்கும் அரிய சிலாக்கியம் உங்களுக்கு உண்டு. ‘இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.” (வெளி 7:16,17). ‘அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.” (ஏசா 25:8).
7.நீதிமான் மரணத்தில் சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் கண்டடைகிறான்.
இந்த அமைதியற்ற உலகில் மரிக்கும்போது விசுவாசிகள் ஒரு அமைதியான இடத்திற்கு செல்கின்றனர். விசுவாசிகளுக்கு மரணம் எவ்வளவு பெரிய அரிய சிலாக்கியம். ‘நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்கு முன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.” (ஏசா 57:1,2).
8.அதிக உபத்திரவப்பட்டு மரிப்போம் என பயப்பட வேண்டாம்.
நீங்கள் கையாள முடியாத பிரச்சனைகள் உங்களைக் கடந்து செல்ல தேவன் அனுமதிக்க மாட்டார். உங்கள் திராணிக்கு மேலாக உங்களுக்கு உபத்திரவத்தை தேவன் கொடுக்க மாட்டார். ‘மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1கொரி 10:13).
9.பவுலின் நம்பிக்கையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.
‘ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.” (ரோமர் 8:18). ‘மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” (2கொரி 4:17,18).
10.மற்றவர்களுக்குப் பாரமாகவோ, நீங்கள் மரித்த பின் உங்களுக்கு அன்பானவர்கள் உங்கள் இழப்பினால் பாதிக்கப்படுவார்கள் என்றோ பயப்பட வேண்டாம்.
‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” (ரோமர் 8:28). ‘அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.” (சங் 10:14). ‘தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.” (சங் 68:5). ‘அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1பேதுரு 5:7).
இயேசு கிறிஸ்து கூறுவதற்கு எதிர்மறையான காரியங்களையே பயம் கூறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பயம் ‘தேவன் உங்கள் மரண வேளையில் உங்களோடு இருக்க மாட்டார் ” என்று கூறும்.
பயம் ‘நீங்கள் உபத்திரவப்பட்டு மரணத்திற்கு முன் மற்றவர்களுக்குப் பாரமாக இருப்பீர்கள்” என்று கூறும்.
பயம் ‘உங்கள் மரணம் உங்களுக்கு அன்பானவர்களுக்கு ஒர் பேரிழப்பாக இருக்கும்” என்று கூறும்.
பயம் ‘மரணத்திற்குப் பின் நீங்கள் பரலோகம் போக மாட்டீர்கள்” என்று கூறும்.
ஆனால் விசுவாசம் ‘நீங்கள் இயேசுவோடு பரலோகத்தில் என்றென்றும் நித்திய காலமாக சந்தோஷமாக இருப்பீர்கள்” என்று கூறும்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship May-June 2008)