ஒரு கிறிஸ்தவனின் பாதுகாப்பு
- Published in Tamil Devotions
டி.எல். மூடியின் கூட்டங்களில் பாடல்களைப் பாடிய ஐரா டி சாங்கி 1860 ஆம் ஆண்டில் கூட்டமைப்பு இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவர் எதிரியின் வரிசையில் ஷார்ப்ஸ்பர்க்கில் காவலராக நியமிக்கப்பட்டார். அருகில் அவர் கேட்ட துப்பாக்கிச் சுடும் சத்தம் எந்த நேரத்திலும் தாக்கப்படும் அபாயம் இருப்பதைக் காட்டியது. வெளியில் கடும் குளிர் இருந்ததால், ஒரு பாடல் பாட தூண்டப்பட்டார். வில்லியம் பிராட்பரி இயற்றிய கீர்த்தனையைப் பாடத் தொடங்கினார். ‘இரட்சா பெருமானே பாரும், புண்ணிய பாதம் அண்டினோம், சுத்தமாக்கி சீரைத் தாரும், தேடி வந்து நிற்கிறோம், இயேசு நாதா இயேசு நாதா, உந்தன் சொந்தமாயினேன்”. அந்த நேரத்தில் ஒரு எதிரி வீரர் அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினார். அவர் சாங்கியைச் சுட தன் விரலை பொறியின் மேல் வைத்து அவரைச் சுடும் தூரத்திலிருந்து குறி வைத்தார். ஆனால் சாங்கி பாடுவதைக் கேட்டபோது அவர் பாடலைக் கேட்கத் தொடங்கினார். அவர் கிறிஸ்தவரானபடியால் சாங்கி பாடினபோது அவருடைய தாய் அவர் சிறு பையனாக இருந்தபோது பாடியது நினைவிற்கு வந்தது. அந்தப் பாடலை அவர் திரும்பவும் கேட்போம் என்று எதிர்பாராததால், அவருடைய கிறிஸ்தவ வளர்ப்பு முறையும், ஆண்டவர் அவருடைய பிள்ளைகளுக்குத் தரும் பாதுகாப்பையும் நினைவிற்குக் கொண்டு வந்தது. சாங்கி ஒரு கிறிஸ்தவர் என உணர்ந்து அவரைக் கொல்லாமல் அந்த இடத்தை விட்டுச் சென்றார். பின்னர் ஒரு கூட்டத்தில் அதே பாடலைப் பாடியபோது, அந்த வீரர் சாங்கியைச் சந்தித்து போரின்போது நடந்த சம்பவத்தைக் கூறினார். ஆம் நாம் ஆண்டவருடைய கரத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம். சோதனைகள் மற்றும் வேதனைகள் மத்தியில் அவர் நமக்குப் பெலனும், கேடகமுமாயிருக்கிறார் (சங் 28:7) என்று வாக்குபண்ணியிருக்கிறார். நமது பாதுகாப்பும் கோட்டையுமானவரை நாம் நம்பலாம்.
கடந்த வருடத்தில் எனது ஊழியத்தில் கவலைகளையும், பிரச்சனைகளையும் கடந்துபோக நேர்ந்தது. ஒரு சமயம் எனது காலை தியானத்தில் சங்கீதம் 139ஐ வாசிக்க ஆரம்பித்தேன். ‘முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது” (சங் 139:5,6) என்பதை வாசித்தபோது, ஆண்டவர் அவருடைய பிள்ளை களுக்கு அருளும் பாதுகாப்பை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. நான் பல கஷ்டங்கள் வழியாகக் கடந்து போகும்போது, ஆண்டவர் என்னைச் சுற்றியுள்ளார், அவருடைய கையை என் மேல் வைக்கிறார் என்று அவர் என்னோடு பேசினார். அவர் எனக்கு முன்பாகவும், பின்பாகவும் வேலி போல அடைத்துக்கொள்ளுகிறார். அவருடைய வல்லமையான கரம் என்னைப் பாதுகாக்கும்படி என் மேல் உள்ளது. ஆம், ‘கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்” (சங் 34:7). விசுவாசிகள் எல்லாப் பக்கத்திலும் தேவனால் பாதுகாக்கப்படுகின்றனர் என்று வேதாகமம் கூறுகிறது.
1.தேவன் நம் முன் இருக்கிறார். (வழி நடத்துகிறார்) – ‘இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜன மாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” (ஏசாயா 48:17)
2.தேவன் நம் பின் இருக்கிறார். – ‘நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21)
3.தேவன் நம் வலது பக்கத்தில் இருக்கிறார் – ‘கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை” (சங் 16:8)
4.தேவன் நம் இடது பக்கத்தில் இருக்கிறார் – ‘இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்” (யோபு 23:9)
5.தேவன் நம் மேல் இருக்கிறார் – ‘தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” (சங் 36:7)
6.தேவனுடைய கரம் நம்மைக் கீழேயிருந்து தாங்குகிறது – ‘அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்” (உபா 33:27)
7.தேவனுடைய கரம் நம்மேல் வைக்கப்பட்டுள்ளது – ‘முற்புறத்திலும் பிற் புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்” (சங் 139:5)
8.தேவனுடைய ஆவியானவர் நமக்குள் இருக்கிறார் – ‘நீங்கள் தேவ னுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?” (1கொரி 3:16)
நாம் கஷ்டமான சூழ்நிலைகளில் இருக்கலாம். ஆனால் கிறிஸ்து நம்மைச் சுற்றியும், நம்முள்ளும் இருப்பதால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆகவே நாம் மனம் தளரவேண்டாம். என்ன நடந்தாலும், நாம் எங்கு சென்றாலும் தேவன் நம்மோடு இருக்கிறார். ஆகவே நாம் தேவனை நம்புவோம். பவுலைப் போல நாமும் தைரியமாக, ‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” என்று கூறுவோம்.
தேவன் என் முன் இருப்பதால், என்னை வழிநடத்துவார்
தேவன் என் பின் இருப்பதால், எந்த தீங்கும் நேரிடாது
தேவன் என் பக்கம் என்னை ஆற்றி, தேற்றுவார்
தேவன் என்னை சுற்றி இருப்பதால், நான் ஏன் பயப்பட வேண்டும்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Apr 1998)