போலி சீஷர்களின் அடையாளங்கள்

By C Barnabas

கல்லூரி மாணவர்களின் கூடுகை ஒன்றில் ஒரு பிரசங்கியார், தன்னார்வல கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை சுவாரசியமாக விவரித்தார். கற்றறிந்த சிறந்த விலங்கியல் பேராசி ரியர் ஒருவர், ஒரு கல்லூரியில் வேலை செய்தார். அவருடைய மாணவர்கள் அவரை அதிகமாக நேசித்தனர். அவருடைய வகுப்புகளில் விருப்பத்துடன் பங்கேற்றனர். விலங்கினங்களின் வகைகளைச் சரியாகக் கண்டு பிடிப்பதில் அவர் ஒரு வல்லுனர். எந்த புத்தகத்தையும் பார்க்காமலே அவர் விலங்கினங்களைத் தனது அறிவின் நுட்பத்தால் கண்டுபிடிப்பதுண்டு. ஒரு வகுப்பு முடிந்தபின் ஒரு மாணவன் அந்த விலங்கியல் விரிவுரையாளரின் திறனை சோதனை செய்யப் போவதாகக் கூறினான். அவன் ஒரே வகையான இரண்டு விலங்கினங்களை எடுத்து அவற்றைச் சேர்த்து ஒரு புது விலங்கினம் போலக் காண்பிக்கப் போவதாக மற்ற மாணவர்களிடம் கூறினான். அடுத்த நாள் அந்த மாணவன் இரண்டு விலங்கினங்களைச் சேர்த்து ஒரு புதிய விலங்கினத்தை உருவாக்கி விரிவுரையாளரிடம் எடுத்துச் சென்றான். அதை அவரிடம் கொடுத்து புது விலங்கினத்தைக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்டான். அந்த விரிவுரையாளர் சிறிது நேரம் அதைப் பார்த்தபின் அதை வித்தியாசமானதாகக் கண்டார். பிறகு அதை சன்னல் அருகே எடுத்துச் சென்று கூர்ந்து கவனித்தார். திரும்பி வந்து மாணவனிடம், ‘இது போலி’ என்று கூறினார். அந்த விலங்கினம் அந்த மாணவனால் உருவாக்கப்பட்டது என்று அந்த விரிவுரையாளர் கண்டு கொண்டார்.
இன்றும் கிறிஸ்தவ உலகத்தில் பல போலி கிறிஸ்தவர்கள் உள்ளனர். பல விசுவாசிகள் அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் உண்மையான விசுவாசிகளைப் போல, பல தாலந்துகளுடனும் அதிசயங்களுடனும் ஊழியத்தில் ஈடுபாடு கொள்ளுகின்றனர். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர்களை எளிதாக போலி கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்வார். அந்த விரிவுரையாளரைப் போல மத்தேயு 7:15-23ல் கள்ளத் தீர்க்கதரிசிகளைக் குறித்து இயேசு கிறிஸ்து போதித்தபோது அவர்களை அடையாளம் கண்டுகொள்ள மூன்று வழிகளைத் தெளிவாகப் போதித்தார்.

1.அவர்களுடைய கனிகளினாலே:
‘அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (மத் 7:16-20). இங்கே கனிகள் என்பது அவர்களின் ஊழியத்தின் விளைவுகள் மற்றும் அவர்களின் வாழ்வு. அவர்களுடைய ஊழியத்தில் மாற்றங்களும், மன மாற்றங்களும் நடைபெறுவதுபோலத் தோன்றலாம். ஆனால் அந்த மாற்றங்கள் தற்காலிகமாக இருந்தாலோ, அவர்களைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை ஆழமற்றதாக இருந்தாலோ, அவர்களின் கனிகள் அவர்களைப் போலி சீஷர் களாக அடையாளம் கண்டு கொள்ள உதவும்.

2.அவர்களுடைய ஊழியத்தினாலே:
போலி சீஷரின் அடுத்த அடையாளம் அவர்களின் ஊழியத்தின் விதம். ‘அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்” (மத் 7:22). இயேசு கிறிஸ்து, போலி சீஷர்கள் மூன்று வகையான ஊழியங்களில் ஈடுபடுவர் என்று கூறுகின்றார். அவர்கள் இயேசுவின் நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பர், பிசாசுகளைத் துரத்துவர், பல அதிசயங்களை ஊழியத்தில் செய்வர். ஆனால் அதே சமயத்தில் பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின்படி செய்யமாட் டார்கள். ‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானே யல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை” (மத் 7:21).
பிதாவின் சித்தம் என்ன? 1தீமோ 2:4ன் படி எல்லாரும் இரட்சிக்கப்படுவது பிதாவின் சித்தமாயிருக்கிறது. ஆனால் இந்தப் பிரசங்கியார் அவரின் சித்தத்தை நிறை வேற்ற எந்த முயற்சியும் எடுக்கமாட்டார். அவர்கள் செழுமையான சுவிசேஷத்தைப் போதித்து வாழ்க்கையில் அதனைக் கடைப்பிடிப்பார். இயேசு கிறிஸ்துவின் கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு கிடைக்கும் இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றத் தவறுகின்றனர். தீர்க்கத்தரிசனம், பிசாசுகளைத் துரத்துதல், இயேசுவின் நாமத்தில் அதிசயங்களைச் செய்தல் போன்ற வரங்களை வெளிப்படுத்தி மக்களை வியக்கச் செய்வர். ஆனால் அப்படிப் பட்டவர்கள் ஆண்டவருடைய நாமத்தில் இவை அனைத்தையும் செய்தாலும் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிப் பதில்லை என்று இயேசு கிறிஸ்து கூறினார். ‘அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத் 7:23). போலி சீஷர்களை நாம் அவர்களின் போதனை களினாலும் ஊழியத்தினாலும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

3. அக்கிரமச் செய்கையுள்ள வாழ்க்கையினாலே:
அவர்களின் அக்கிரமச் செய்கையினால் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். ‘அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்” (மத் 7:23). இங்கு இயேசு கிறிஸ்து அவர்களை அறியேன் என்று கூறுகிறார். அவர்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்து ஊழியத்தில் ஈடுபட்டனர் என்று தெரிகிறது. ஆனால் இயேசு கிறிஸ்து அவர்களை அறியவில்லை என்று கூறுவதால், அவர்கள் உண்மையாக இரட்சிக்கப்பட வில்லை என்று புரிகிறது. மேலும் அவர்கள் அக்கிரமச் செய்கைகளையே நடைமுறைப்படுத்துகின்றனர். அக்கிரமச் செய்கை என்றால் என்ன? தேவனுடைய வார்த்தைக்கு மாறாக வாழ்வது அக்கிரமச் செய்கை. அது அக்கிரமத்தில் வாழ்வது, (அப் 2:23, மத் 13:41), அநீதியாய் நடப்பது. (2கொரி 6:14) ஆகும். இன்று நம் மத்தியில் அநேகர் நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் சாட்சியற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களின் அக்கிரமத்தால் அவர்களை அடையாளம் காண முடியும். ஆண்டவர் அவர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகி வாழ நமக்கு உதவி செய்வாராக. ‘கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத் 7:15) என்று இயேசு கூறினார்.

(Dr. C Barnabas, Translated from True Discipleship January 1999)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment