இரகசிய ஜெபங்கள்
- Published in Tamil Devotions
அன்னை தெரசாவிடம் அவருடைய சேவையின் வல்லமையின் இரகசியத்தைக் குறித்துக் கேட்டபோது, ‘எங்கள் சகோதரிகள் காலையில் நாலரை மணிக்குத் தினமும் எழுந்து சில மணி நேரம் ஜெபத்தில் செலவு செய்வதுதான் காரணம்” என்று கூறினார். மத்தேயு 6:5-8ல் மலைப் பிரசங்கத்தில் ஆண்டவர் கற்றுத் தந்ததை அவர்கள் கடைப்பிடித்ததால் தான் அவர்க ளின் பணி வெற்றியாக நடைபெற்றது.
இந்தப் பகுதியில் இயேசு சீஷர்களுக்கு மூன்று வகையான ஜெபங்களைப்பற்றிப் போதித்தார். பதிலளிக்கப்படாத இரண்டு வகையான ஜெபங்களையும், வெளியரங்க மான வெகுமதியளிக்கும் ஒரு வகையான ஜெபத்தையும் குறித்து விளக்கினார்.
1.மாயக்காரரின் ஜெபம்: இயேசு தனது சீஷர்களை, பலர் பார்க்க வேண்டும் என்பதற்காக ஜெபம் செய்யும் மாயக்காரரைப்போல இருக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அவர்கள் இரகசியமாக ஜெபம் செய்யாமல் ஜெப ஆலயங்களிலும், வெளியரங்கமாகவும், வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் செய்தனர். இன்றும், கூட்டங்களில் மட்டும் ஜெபம் செய்துவிட்டு இரகசியமாக ஜெபிக்கத் தவறும் பல விசுவாசிகள் உள்ளனர். இயேசு அவர்களை மாயக்காரர்கள் என்று அழைத்து, அவர்களின் ஜெபங்கள் பதிலளிக்கப்படமாட்டாது என்று கூறினார் (மத் 6:5).
2.அஞ்ஞானிகளின் ஜெபம்: அந்தக் காலத்தில் அஞ்ஞானிகள் நீண்ட ஜெபம் செய்து பல வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்லி ஜெபம் செய்தனர். அப்படிச் செய்தால் ஜெபம் கேட்கப்படும் என்று நினைத்தனர். ஆனால் ஆண்டவர் தன் சீஷர்களிடம், அவர்களின் ஜெபம் பதிலளிக்கப்படாது, ஆகவே அவர்களைப் போல இருக்க வேண்டாம் என்று கூறினார். இன்றும் அநேக விசுவாசிகள் ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் தங்கள் ஜெபத்தில் கூறுவதால் ஜெபம் நீண்டு பதிலளிக்கப்படும் என்று எண்ணுகின்றனர். ஆனால் அது கிறிஸ்துவின் போதனைக்கு விரோதமானது (மத் 6:7).
3.சீஷர்களின் ஜெபம்: இயேசு அவருடைய சீஷர்களை அறைக்குள் சென்று கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற பிதாவை நோக்கி ஜெபம் பண்ணும்படிப் போதித்தார். அவர் தனது வாழ்க்கையில் தனது போதனையைக் கடைப்படித்தார். தனியாக வனாந்தரத்திலும், மலைகளிலும் ஜெபம் செய்தார். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாகிய நாம் அந்தரங்கத்தில் ஜெபம் செய்கிறோமா? (மத்6:6).
அந்தரங்கத்தில் ஜெபித்து வெளியரங்கமாக வெகுமதி பெற்ற மூன்று பெண்களைக் குறித்துப் பார்ப்போம்.
>ஐம்பது ஆண்டுகளாகப் படுக்கையில் இருந்து ஜெபிக்கும் ஒரு தெய்வபக்தியுடைய சகோதரியை வில்லியம்கேரி பெற்றிருந்தார். அவள் முழுவதுமாக பிறரைச் சார்ந்தே வாழ்ந்தார். ஆனால் அவள் உண்மையாக வில்லியம்கேரியின் பணிக்காக படுக்கையில் இருந்தவாரே பல ஆண்டுகள் ஜெபித்தார். பென்சிலைத் தன் பற்களுக்கு இடையில் வைத்து கேரியை உற்சாகப்படுத்தும் வண்ணம் கடிதங்கள் பலவற்றை எழுதினாள். அவளுடைய அந்தரங்க ஜெபத்தை ஆண்டவர் கேட்டு வெளியரங்கமான வெகுமதியாக, வில்லியம் கேரியைக்கொண்டு நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வேதாகமத்தின் பகுதிகளையும், முழு வேதாகமத்தை மூன்று மொழிகளிலும், பிறரின் உதவியோடு மொழி பெயர்க்கும்படியாகத் தேவன் செய்தார். ஒரு கல்லூரியையும், பல பள்ளிகளையும், ஆலயங்களையும் அவர் நிறுவினார். பல நூறு மக்கள் இரட்சிக்கப்பட்டு சபையில் சேர்ந்தனர்.
>டி.எல். மூடி ஒரு காலை ஆராதனையில் பிரசங்கித்தபோது ஒருவரும் அந்த ஆராத னையில் ஆண்டவரின் பக்கம் வரவில்லை. ஒரு முடமான பெண், உபவாசித்து ஒரு நாள் முழுவதும் அந்த சபையில் நடக்க விருந்த அடுத்த கூட்டத்திற்காக ஜெபம் செய்தாள். அந்தக் கூட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர்.
>சி.டி.ஸ்டட் கல்லூரியில் இருந்தபோது ஆண்டவரை ஏற்றுக்கொண்டார். அவர் ஒரு பிரபல கிரிக்கெட் வீரராக மாறி தனது ஆவிக்குரிய வாழ்வைப் புறக்கணித்தார். இரண்டு சகோதரிகள் அவருடைய ஆவிக்குரிய எழுச்சிக்காக விசேஷமாக ஜெபம் செய்தனர். சி.டி.ஸ்டட் ஆஸ்திரேலியாவிற்கு ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்ற போது, தனது வாழ்க்கையை ஆண்டவருக்கு முழுவதுமாக அர்ப்பணித்தார். ஆண்டவர் அவரை சீனாவிலும், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உபயோகித்தார்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Oct. 1999)