தேவனுடைய மனிதர்களின் உண்மை
- Published in Tamil Devotions
மொர்தெகாய் ஹம், 1934ல் இரவு நேரங்களில் சார்லோட் என்ற இடத்தில் தேவனுடைய வார்த்தையை உண்மையோடு தினமும் பிரசங்கித்து வந்தார் என்று ஆர்வத்துடன் வாசித்தேன். அவர் உண்மையுள்ள தேவனுடைய மனிதனாகயிருந்தாலும், அவர் ஒரு பெரிய சுவிசேஷகர் அல்ல. அவர் தேவனை உண்மையாகப் பின்பற்றி அவருடைய பணியைச் செய்தார். டி.எல். மூடி, மொர்தெகாய் ஹம்மை தேவனிடத்திற்கு வழி நடத்தினார். மொர்தெகாய் ஹம் உண்மையான தேவனுடைய மனிதனாய், தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்தார். அவருடைய கூட்டங்களில் பில்லிகிரஹாம் தேவனுக்குத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். பில்லிகிரஹாம் ஆயிரக் கணக்கானவர்களை தேவனிடத்தில் வழி நடத்தினார்.
தேவன் நம்முடைய வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் ஹம்மைப் போல உண்மையாக இருக்க விரும்புகிறார். ‘உண்மையுள்ள” என்ற வார்த்தைக்கு அகராதிகள் ‘வாக்கை நிறைவேற்றுவதில் உறுதி”, ‘விசுவாசமான”, ‘நிலையான”, ‘உண்மைக்கு வசதியானது”, ‘நம்பிக்கைக்கு உரியது”, ‘உண்மை” மற்றும் ‘சரியானது” என்று அர்த்தங்களைக் கொடுக்கின்றன. மற்றொரு அர்த்தம் ‘முழுமையான விசுவாசமுடையது”. ஆகவே உண்மைத் தன்மை என்பது அசைக்கப்பட முடியாத உண்மையான வாழ்க்கையையும், விசுவாசத்திற்குப் பாத்திரமாக நடப்பதையும் குறிக்கிறது. நமது நம்பிக்கையை செயலில் காட்டுவது ஆகும். நமது விசுவாசத்தை உண்மையாக வாழ்ந்து காட்டுவதன் மூலம் நம் உண்மைத் தன்மையைக் காண்பிக்கலாம்.
உண்மைத் தன்மைக்கு எதிர்ச்சொல் ‘நம்பிக்கையில்லாமை”, ‘நேர்மையற்ற”, ‘நம்பிக்கைக்கு ஒவ்வாத”, ‘விசுவாசமற்ற” மற்றும் உண்மையில்லாத தன்மையாகும். ஒரு உண்மையான தேவனுடைய மனிதன் இந்த குணாதிசயங்களைத் தன் வாழ்வில் உடையவனாய் இருக்க மாட்டான். தேவனுக்கு உண்மையாக வாழ்ந்த தேவ மனிதர்கள் பலரைப் பற்றி வேதாகமம் கூறுகிறது. வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
1.மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராக நடந்தார்: ‘அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.” (எண் 12:6,7).
2.தாவீது தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவராக நடந்தார்: ‘அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களைவிட்டு விலகாமல், அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக் கொண்டேன்.” (2சாமு 22:23,24).
3.யோசியா தேவனுடைய பார்வையில் உண்மையானதைச் செய்தார்: ‘யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் எதிதாள். அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.” (2இராஜா 22:1,2).
4.எசேக்கியாவின் காலத்தில் ஆசாரியர்களும், லேவியர்களும் பண விஷயங்களில் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள்: ‘அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப் படுத்தச் சொன்னான். அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம் பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின் மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான்.” (2நாளா 31:11,12).
5.ஆனானியும், அனனியாவும் தேவனுடைய பணியில் உண்மையுள்ளவர் களாக இருந்தார்கள்:‘அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவ னும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியா வையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.” (நெகே 7:1,2).
6.ஆசாரியர்களும், வேதபாரகர்களும், லேவியரும் தங்கள் பணியில் உண்மையுள்ளவர்களாய் இருந்தார்கள்:‘அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாவையும், இவர்களுக்குக் கைத்துணையாகத் தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது.” (நெகே 13:13).
7.இயேசுகிறிஸ்து தனது பணியில் உண்மையுள்ளவராயிருந்தார்: ‘இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.” (எபி 3:1,2).
8.பவுல் உண்மையுள்ளவர் என்று எண்ணி ஊழியத்திற்கு நியமிக் கப்பட்டார்:‘என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.” (1தீமோ 1:12).
9.தீமோத்தேயு ஆண்டவருக்குள் பவுலுக்கு உண்மையுள்ள மகனாக எண்ணப்பட்டார்: ‘இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்.” (1கொரி 4:17).
10.காயு மற்றவர்களுக்கு உதவுவதில் உண்மையுள்ளவராயிருந்தார்: ‘பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிறயாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.” (3யோவான் 5,6).
புதிய ஏற்பாட்டில் ‘உண்மையுள்ள” என்ற வார்த்தையின் கிரேக்க வார்த்தை ‘பிஸ்டோஸ்” ஆகும். அது செய்வினையாகவும், செயப்பாட்டு வினையாகவும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. வேதாகமத்தில் செய்வினையாகப் பயன் படும்போது அதன் அர்த்தம் ‘நம்புகிற” அல்லது ‘விசுவாசிக்கின்ற” என்று கூறுகிறது. ஆனால் செயப்பாட்டு வினையாக வரும்போது ‘நம்பகமான”, ‘உண்மையுள்ள”, ‘நம்பிக்கைக்குரிய” என்ற அர்த்ததத்தில் வருகிறது. ஆகவே ‘பிஸ்டோஸ்” என்பது தேவனைப் பின்பற்றுவதில் அசைக்கப்பட முடியாத நம்பிக்கை அல்லது நம்பகத் தன்மையைக் குறிக்கிறது.
மத் 24:45, மத் 25:21-23 ஆகிய இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள ‘பிஸ்டோஸ்” உண்மையுள்ள ஊழியனைக் குறிக்கிறது.
ஆகவே, ஆண்டவர் நம்மை உண்மையும், உத்தமமுமான, நம்பிக்கைக்குரிய தேவனுடைய ஊழியக்காரராய் நமது பொறுப்புகளை நிறைவேற்ற விரும்புகிறார்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship July 1999)