தியானத்தின் முக்கியத்துவம்
- Published in Tamil Devotions
ஒரு அமைப்பின் தலைவர் ஒரு முறை கிறிஸ்தவ தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கு பெற்றார். அந்த மாநாட்டில் தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பது குறித்து ஒரு கூட்டம் நடந்தது. தியானம் குருக்க ளுக்கும், ரிஷிகளுக்கும்தான் என்று நினைத்த அந்தத் தலைவர், தியானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தேவனுடைய வார்த்தையை தியானித்தல் மிகவும் முக்கியமானது என்று தேவன் அவரோடு பேசினார். அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற பின், தேவனுடைய வார்த்தையைத் தினமும் தியானிக்க தீர்மானம் செய்தார். விசுவாசிகள் ஏன் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
1.தலைவர்களுக்கு தேவன் தந்த கட்டளை:
யோசுவாவை தேவன் மக்களை வழிநடத்தும்படி கட்டளையிட்டபோது, இரவும் பகலும் தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கும்படி கூறினார். ‘இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும் படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.” யோசுவா 1:8
2.தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தரும்:
‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” சங்கீதம் 1:2,3
3.புரிந்துகொள்ளுதலைத் தரும்:
‘என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.” சங்கீதம் 49:3
4.திருப்தியைத் தரும்:
‘நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.” சங்கீதம் 63:5,6
5.உயர்ந்த அறிவைத் தரும்:
‘உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.” சங்கீதம் 119:99
ஒரு பள்ளி ஆசிரியை தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து, மதிய உணவு இடைவேளையில், சாப்பாட்டு அறையைக் கண்காணிக்க அழைக்கப்பட்டபோது தினமும் ஒரு வசனத்தைத் தியானம் செய்ய தீர்மானித்தார். மாணவர்கள் உணவு உட்கொள்ளும் போது, சாப்பாட்டு அறையில் நின்றுகொண்டிருப்பது கடினமாக இருந்ததால், இந்தத் தீர்மானத்தை செய்தார்.
‘நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.” (சங்கீதம் 46:10) போன்ற வசனங்களை அவர் தியானம் செய்ய தொடங் கினார், ஒவ்வொரு வார்த்தையையும் சொற்றொடரையும் அநேக முறை தன் மனதில் தியானித்தார். அதைத் தொடர்ந்து செய்தபோது, அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. தாவீதைப் போல தேவனை அறிந்து, மகா சமாதானத்தை அநுபவிக்க ஆரம்பித்தார். அது அவருக்கு ஒரு ஆசீர்வாதமாக மாறியது. ‘உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமா யிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.” (சங்கீதம் 119:97)
நாமும் இவரைப்போல தேவனுடைய வார்த்தையைத் தியானிக்க தேவன் நமக்கு தினம் தினம் உதவி செய்வாராக.
(Dr. C Barnabas, Translated from True Discipleship May-June 2009)