உலகப் பொருட்கள் குறித்து பவுலின் நம்பிக்கை
‘சி.டி.ஸ்டட் பின்வரும் தலைமுறைகளுக்கு ஒரு அடையாளமாக இந்த உலகப் பொருட்கள் அனைத்தையும் இழந்து மறு உலகத்திற்காக வாழ்வது பயனுள்ளதாகக் கருதினார். கிரயத்தைப் பாராமல் திரும்பிப் பார்க்காமல், கிறிஸ்துவைப் பின்பற்றுவது எப்படி என்பதைத் தன் வாழ்வில் எடுத்துக் காட்டினார்” என்று ஆல்பிரட் பக்ஸ்டன் என்பவர், சி.டி. ஸ்டட் பணத்தைப்பற்றிக் கொண்டிருந்த மனப்பான்மையைக் குறித்து எழுதினார்.
ஜனவரி 13 1887ல் சி.டி.ஸ்டட் 29000 பவுண்டுகள் அதாவது இன்றைய மதிப்பீட்டில் 25 கோடிக்குச் சமமான பரம்பரை சொத்தைப் பெற்றார். அவருடைய அனைத்து செல்வத்தையும் பல்வேறு ஊழியங்களுக்குக் கொடுத்தார். ஒரு சிறு பகுதியை தனது மனைவிக்குக் கொடுத்தார். ஆனால் அவருடைய மனைவியும் தனது பங்கை திருமணத்திற்குப் பின் ஆண்டவருடைய ஊழியத்துக்குக் கொடுத்தார். அவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை ஏழைகளாகவே ஆரம்பித்தனர். ஆனால் ஆண்டவர் அவர்களுடைய தேவைகளைச் சந்தித்து கோடிக்கணக்கான மக்களை அவர்களின் ஊழியத்தின் மூலமாகவும் அவர்கள் நிறுவிய அமைப்பின் வாயிலாகவும் சந்திக்க உதவிசெய்தார்.
இன்று பல கிறிஸ்தவர்கள் ஸ்டட் செய்ததைப் போல செய்யாமல் மாறாக உலகப் பொருட்களை சேகரிக்க பிரயாசப்படுகிறார்கள். தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் பணத்தைச் சேர்த்து வைக்க விரும்புகிறார்கள். இருபதாவது நூற்றாண்டில் விக்கிரகமாய்ப்போன பணத்திற்குப் பின்பாக பல பிரசங்கியார் ஓடுகின்றனர். ஆனால் ‘ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல” என்றும் விசுவாசிகளை ‘பரலோகத்திலே பொக்கிஷங்களை” சேர்த்து வைக்கவும் வேதாகமம் அழைக்கிறது.
உலகப் பொருட்களைக் குறித்து வேதாகமத்தின் போதனைகளைப் பவுல் 100 சதவீதம் நம்பினார். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை. இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்று உலகப் பொருட்களைக் குறித்து உறுதியாக நம்பினார். ‘உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1தீமோ 6:7-8). பல விசுவாசிகளும் பிரசங்கியார்களும் உலகப் பொருட்களை மறு உலகத்திற்குக் கொண்டு செல்வது போல வாழ்வது பரிதாபமான ஒரு காரியம். பவுல் ஏன் உலகக் காரியங்களுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவம் கொடுத்தார் என்று பார்ப்போம்.
பவுல், உலகப் பொருட்களை இந்த உலகத்திலிருந்து நாம் எடுத்துச் செல்ல முடியாது என்று நம்பினார்: ‘உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்ததுமில்லை இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.” (1தீமோ 6:7-8).
பவுல், இந்த உலகப் பொருட்களின் மேல் நோக்கமாய் இருக்கவில்லை: ‘ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள் காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” (2கொரி 4:18)
பவுல், செல்;வம் ஆவிக்குரிய வாழ்க்கையைக் கெடுக்கும் என்று உறுதியாக நம்பினார்: ‘பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறதுளூ சிலர் அதை இச்சித்து விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1தீமோ 6:10)
பவுல், செல்வம் நிலையில்லாதது என்று நம்பினார்: ‘இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும் நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும் நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும் .. அவர்களுக்குக் கட்டளையிடு.” (1 தீமோ 6:17)
பவுல் விசுவாசிகள் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று போதித்தார்: ‘நன்;மைசெய்யவும் நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும் தாராளமாய்க் கொடுக்கிறவர்களும் உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும் நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.” (1தீமோ 6:18-19)
பவுல் செல்வம் அழிவிற்கு வழிநடத்தும் என்று கருதினார்: ‘ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” (1தீமோ 6:9)
பவுல் உலகப் பொருட்களைத் தேடுவதை விட்டு ஓட வேண்டும் என்று போதித்தார்: ‘நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.” (1தீமோ 6:11)
பிரெய்லி அமைப்பைக் கண்டறிந்த முனைவர் மூன் பிறப்பின்போது குருடாகப் பிறக்கவில்லை. அவர் இளைஞரானபோது, தன் கண் பார்வையை இழந்தார். அவர் தனக்கு நேர்ந்த துரதிர்ஷ்டத்திற்காகத் தேவனைக் கேள்வி கேட்கவில்லை. இந்தத் தடைக்காக முறுமுறுக்கவில்லை. தனது குருட்டுத்தன்மைக்காக தேவனுக்கு நன்றி கூறினார். திரும்பத் தன் கண் பார்வை அடைய வாய்ப்பில்லை என்று அறிந்த போது தேவன் தன் தாலந்துகளை அவருடைய நாம மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று ஜெபித்தார்.
தேவன் அவருடைய ஜெபத்தைக் கேட்டதினால் பிரெய்லி அமைப்பை அவர் கண்டறிந்தார். கோடிக்கணக்கான கண்பார்வையற்ற மக்கள் வேதாகமத்தை வாசிக்கவும் சுவிசேஷத்தைப் புரிந்து கொண்டு தேவன் மேல் தங்கள் நம்பிக்கை வைக்கவும் உதவினார். முனைவர் மூன் மற்றும் பவுலிடமிருந்து உலகக் காரியங்கள் முக்கியத்துவம் அற்றவை என்று நாம் படித்தறிய வேண்டும். செழுமையான உபதேசத்தைப் போதிக்கும் பிரசங்கியாரின் வேதத்திற்குப் புறம்பான போதனைகளைப் பின்பற்றாமல் இருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக.