உன் வாழ்வில் முன்னுரிமை எது?

By C Barnabas

சென்னையிலே சமீபத்தில் ஒரு தொழிலதிபரைச் சந்தித்தேன். அவர் ஒரு நிறுவனத்தின் சொந்தக்காரர். அவர் மிஷனரி பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவர் வெற்றிகரமான தொழிலதிபர் மட்டும் அல்லாமல், அவர் வெற்றிகரமாக ஆத்தும ஆதாயம் செய்பவர். அவர் அநேகரைக் கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்தியுள்ளார். அவர் அதிகாரியாக அந்த நிறுவனத்தில் இருந்தாலும் எல்லா வழிகளையும் உபயோகித்து அவர் மற்றவரை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தினார். பவுலைப் போல எவ்விதத்தினாலாவது மற்றவர்களைக் கிறிஸ்துவினிடத்தில் கொண்டுவருவதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
அவருடைய நிறுவனத்தில் உள்ள வேலைப் பளுவின் மத்தியில், சபைகளில் பிரசங்கம் செய்ய வரும் வாய்ப்பை ஏற்று, மிஷனரி பணியிலும் ஈடுபாடு கொள்வார். அவருடைய நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் இரண்டு வேத ஆராய்ச்சிகளை நடத்தினார். வேதாகமத்தைப் படிக்க அவருடைய தொழிலாளர்களை உற்சாகப்படுத்தி, வேதாகமத் தேர்வில் வெற்றிபெறும்போது அவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்தார். அவருடைய நிறுவனம் அவருக்கு முன்னுரிமை இல்லை. அவர் தனது நிறுவனத்தை தேவனிடம் கொடுத்துவிட்டார். வேதாகமத்தை மையமாகக் கொண்டு ஊழியங்கள் தொடங்கும் தலைவர்களைப் பயிற்றுவிக்கும் தரிசனத்தை தேவன் கொடுத்ததாக அவர் கூறுகிறார். பவுலைப் போல அவர் கூடாரம் செய்பவர். அவருடைய அர்ப்பணிப்பும் தரிசனமும் நமக்கு சவாலாக உள்ளது.
இதுவே எழுப்புதலை நடத்தியவர்களின் அனுபவமாக இருந்தது. அவர்கள் கிறிஸ்துவிடம் அநேகரைக் கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆத்துமாக்;களை ஆதாயம்செய்யும் வேட்கையுடையவர்களாக இருந்தனர். ‘ஆயிரக்கணக்கான இளம்வாலிபர் மரணத்தின் வழி செல்வதைப் பார்க்கும்போது இயேசுவின் பாதத்தில் விழுந்து கண்ணீரோடும் ஜெபத்தோடும் அவர்களை மீட்க கேட்க ஏவப்பட்டேன்” என்று டி.எல்.மூடி ஒருமுறை கூறினார். மற்றவர்களைக் கிறிஸ்துவினிடத்தில் கொண்டுவர மூடியைப் போல நாமும் பாரமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இது உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா? ஒரு நிறுவனத்தின் தொழிலதிபராக நீ இல்லாமல் இருக்கலாம். நீ எழுப்புதலை நடத்துபவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உன் வேலையிலும், பல இடங்களிலும் பல மக்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை தேவன் உனக்குக் கொடுத்துள்ளார். மூடியைப் போல ஆத்துமாக்களின்மேல் தாகம் இருந்தால் அநேகரைக் கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்தும் ஊழியத்தில் ஈடுபாடுகொள்ள வேண்டும். பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு சவாலாக உள்ளது. அவர் தன்னுடைய எல்லாவற்றையும் கிறிஸ்துவிடம் கொடுத்து, அநேகரைக் கிறிஸ்துவிடம் கொண்டு வந்தார். தேவனுக்கு முன்னுரிமை கொடுத்து, சபைகளை நிறுவிய, பவுலின் கொள்கைகளைப் பார்ப்போம்.

1)தேவனுடைய ஊழியத்துக்கு முதலிடம் கொடுத்ததற்கான காரணங்கள்:
இங்கிலாந்து மன்னன், இரட்சணியசேனையின் நிறுவனர் வில்லியம் பூத்திடம் ‘உன்னுடைய வாழ்வின் முக்கியத்துவம் எது?” என்று கேட்ட போது, ‘ஐயா, சிலர் தங்கத்தை முக்கியப்படுத்துவர், சிலர் புகழைத் தேடிச் செல்வர், ஆனால் என்னுடைய தாகம் ஆத்தும ஆதாயம் செய்வதே” என்று கூறினார். வில்லியம் பூத் பணத்தையோ புகழையோ நாடாமல், அழியும் ஆத்துமாக்களையே தேவனிடத்தில் கொண்டு வர நாடினார்.
பவுல் ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதை முக்கியமாகக் கருதினார். அவரை இவ்வாறு ஆத்தும ஆதாயப் பணியில் ஈடுபடச் செய்தது அவரின் கொள்கைகளே. நாம் அவற்றை இப்போது படிக்கலாம்.
i)பவுல் உலகக் காரியங்களை நஷ்டமும், குப்பையுமாக எண்ணினார்:
‘எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும் படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.” (பிலி 3:7-11)

ii)பவுல் தன் பார்வையை காணப்படாதவைகளின் மேல் பதித்தார்:
‘காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.” (2கொரி 4:18,19).

iii)பவுலின் குடியிருப்பு பரலோகமாயிருந்தது:
‘நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற் றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” (பிலி 3:20,21).

iv)பவுல் தன்னை சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க கடனாளியாகக் கருதினார்:
‘கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியா யிருக்கிறேன். ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன்.” (ரோமர் 1:14,15)

v)பவுல் தான் சுவிசேஷத்திற்கு உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவர் என்று நம்பினார்:
‘சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.” (பிலி 1:15-17)

vi)பவுல் கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கப்பட்டார்:
‘கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத் திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2கொரி 5:14,15).

2)கொள்கைகளின் விளைவுகள்:
ஜான் வெஸ்லியை இரண்டு கண்டங்களில் எழுப்புதல் கொண்டு வர தேவன் உபயோகித்தார். இது அவர்களின் ஆத்துமாக்களை, கிறிஸ்துவிற்காக ஆதாயம் செய்யும் வாஞ்சையினாலும், அர்ப்பணிப்பாலும்தான். அவருடைய நம்பிக்கை, ஊழியத்தில் ஈடுபாடு கொள்ள அவரைத் தூண்டியது. போதகர்களையும் இதேபோல் நம்பிக்கையோடு எழுப்புதலைத் தொடர அவர் உபதேசித்தார். ‘நாம் எல்லாரும் ஒரே வேலையில் ஈடுபடுவோம். நாம் இதற்காகத்தான் வாழ வேண்டும், நம்முடைய ஆத்துமாக்களையும் நம்மைக் கேட்பவர்களின் ஆத்துமாக்களையும் இரட்சிக்க வேண்டும்.”
‘பாவத்தைத் தவிர எதற்கும் பயப்படாமலும், தேவனைத் தவிர எதன்மேலும் வாஞ்சையில்லாமலும் இருக்கும் 100 போதகரை என்னிடம் கொடுங்கள். அவர்கள் குருமார்களாக இருந்தாலும் சரி, சாதாரண மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களே நரகத்தின் கதவுகளை அசைத்து, தேவனுடைய இராஜ்ஜியத்தை இந்த உலகத்தில் அமைப்பர்.”
ஜான் வெஸ்லியையும், அவருடைய சீடர்களையும் தேவன் கோடிக்கணக்கான மக்களைக் கிறிஸ்துவிடம் கொண்டுவர பயன்படுத்தினார். ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. பவுலைப் போல எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஊழியத்தில் ஈடுபட ஏவியது.

பவுல் எவ்வாறு ஊழியத்தில் ஈடுபட்டார் என்பதைப் பார்க்கலாம்:
i)சுவிசேஷத்தைக் குறித்து பவுல் வெட்கப்படவேயில்லை:
‘கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.” ரோமர் 1:16

ii)கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவும் பவுலைப் பிரிக்க முடியவில்லை:
‘மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானா லும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:38,39).

iii)அநேகரை மீட்கும்படியாக எல்லாருக்கும் எல்லாமானார்:
‘நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப் படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத் தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்ட வனைப்போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும் படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந் தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப் போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.” (1கொரி 9:19-22)

iv)பவுல் தேவனிடத்தில்கொண்டிருந்த ஆழமான அர்ப்பணிப்பினால், எதுவும் அவரை தேவனுக்கு ஊழியம் செய்ய விடாமல் தடுக்க முடியவில்லை:
‘இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். கட்டு;களும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.” (அப் 20:22-21)

v)ரோம சாம்ராஜ்ஜியம் முழுவதும் பவுல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்:
‘புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம் வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்த வர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்.” (ரோமர் 15:18-21)

vi)இரவும் பகலும் கண்ணீரோடு தேவனுக்கு ஊழியம் செய்து, ஒரு மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார்:
‘ஆனபடியால், நான் மூன்று வருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.” (அப் 20:31-35)
பவுல் தனது நம்பிக்கையினால் எல்லாவற்றையும் தியாகம் செய்து ஊழியத்தில் ஈடுபாடு கொண்டார். பவுலைப் போல பரலோக நம்பிக்கையுடன் நாம் வாழ்கிறோமா? நமது கண்கள் எங்கே நோக்கமாக இருக்கிறது? (2கொரி 4:18). பவுல் காணாதவைகளைக் காணும்படி நோக்கமாக இருந்தார். ஆகவே கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய தன்னை ஒப்புக்கொடுத்தார்.
தேவன் தாமே நமக்கு ஆத்துமாக்களுக்கு சுவிசேஷத்தைப் பகிர்ந்து, அவர்களைத் தேவனுக்காக வெற்றிகொள்ள, முன்னுரிமை கொடுக்க உதவி செய்வாராக.

(Dr. C Barnabas, Translated from True Discipleship Mar-Apr 2006)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment