வாழ்க்கையில் முரண்பாடு
- Published in Tamil Devotions
ஒரு பயிற்சி முகாமில் நான் கற்பிக்கும் கூட்டம் முடிவில் ஒரு மிஷனரி என்னிடம் வந்து, ‘என் பணித்தளத்தில் என் சக ஊழியர்களோடு சாதி பிரச்சனையால் மோதல்கள் வருகிறது” என்று கூறினார். அதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சி அடைந்தேன். மிஷனரி பணியாளர்கள் மத்தியில் பிரச்சனைகளும் சச்சரவுகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் அவருக்குச் சில ஆலோசனைகள் கூறி, ஒரு மூத்த தலைவரிடம் அனுப்பினேன். அவர் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க உதவி செய்தார்.
அதே நாள் நான் நூலகம் சென்று ஒரு புத்தகத்தை வாசித்தேன். அந்த புத்தகம் மிஷனரிகளின் வாழ்வில் வரும் மோதல்களின் காரணத்தை வெளிப்படுத்தியது. மிஷனரிகள் தங்கள் வேலைகளையும், நண்பர்களையும், உறவினர்களையும், கலாச்சாரத்தையும் விட்டுத் தூர இடத்திற்குப் போனாலும், அவர்கள் தங்கள் சுயத்தையும், மாம்சத்தையும் எடுத்துச் செல்வதே எல்லா உறவு பிரச்சனைகளுக்கும் மூல காரணமாயிருக்கிறது.
‘பல அவிசுவாசிகளை நாம் சுலபமாக சமாளிக்கலாம். ஆனால் வெகு சில விசுவாசிகளை சமாளிப்பது ஊழியத்தில் மிக கடினமாக உள்ளது” என்று ஒருவர் கூறினார். விசுவாசிகளின் மத்தியில் மோதல்கள் வருவதற்கு முக்கிய காரணம் ‘சுயம்’ அல்லது ‘மாம்சம்’ மேலோங்கி நிற்பதால்தான். வேதாகமம் மாம்சத்தை அதனுடைய சரியான இடமாகிய சிலுவையில் அறைய வேண்டும் என்று கூறுகிறது. ஒரு விசுவாசி மாம்சத்தை சிலுவையில் அறையாமல், அதை வாழ்க்கையின் மையத்தில் வைக்கும்போது, விசுவாசிகளின் மத்தியில் அது
மோதல்களைக் கொண்டு வருகிறது.
விசுவாசிகளின் வாழ்க்கையில் மாம்சத்தின் விளைவுகளையும், அதை மேற்கொள்ள எடுக்க வேண்டிய படிகளையும் நாம் பார்க்கலாம்.
மாம்சத்தின் விளைவுகள்:
1.தீமையான கிரியைகளை உருவாக்குகிறது:‘மாம்சத்தின் கிரியைகள் வெளி யரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்க பேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே” (கலா 5:19-21).
2.மனதை ஆதிக்கம் செய்கிறது:‘அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற் காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.” (எபே 2:3).
3.பாவம் செய்ய வைக்கிறது: ‘மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டு மென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.”(கலா 5:17).
4.அழிவை அறுக்கச் செய்கிறது: ‘தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்” (கலா 6:8).
மாம்சத்தை மேற்கொள்ள வழிகள்:
1.துர்இச்சைகளுக்கு இடம் கொடாமல் இருப்பது:’துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (ரோமர் 13:14).
2.மாம்சத்தின்படி நடக்காமல் இருப்பது:‘ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக் குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.” (ரோமர் 8:1).
3.மாம்சத்தின்படி வாழாமல் இருப்பது:‘ஆகையால் சகோதரரே, மாம்சத் தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத் தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.” (ரோமர் 8:12,13).
4.மாம்சத்தையும் அதன் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைவது: ‘கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.” (கலா 5:24).
முதலாம் நூற்றாண்டில் நடந்த எழுச்சியின் மத்தியிலும் விசுவாசிகளின் மத்தியில் மோதல்கள் வந்தது. இனத்தின் அடிப்படையில் உணவு பரிமாறுவதில் பாரபட்சம் இருந்தது. ஆகவே 12 சீஷர்களும் மற்ற விசுவாசிகளுடன் சேர்ந்து, நற்சாட்சி உள்ள 7 விசுவாசிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அந்த வேலையை அளித்தனர். அவர்கள் அந்த பிரச்சனையைத் தீர்த்து, மூன்று மடங்கு விளைவுகளை அளித்தனர் (அப் 6:7).
a)தேவனுடைய வார்த்தை பரவியது.
b)எருசலேமிலிருந்த சீஷர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
c)பல ஆசாரியர்கள் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தனர்.
நாமும் மோதல்களைத் தீர்க்க வேதாகமத்தில் கூறப்படுவதுபோல ஒப்படைப்பிலும், தேவ வசனத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்வோமாக.
(Dr. C Barnabas, Translated from True Discipleship September 1993)