விசுவாசிகளின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் தனித்துவமான பங்கு
- Published in Tamil Devotions
சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிடிவாதமாகவும், சோம்பேறியாகவும் இருந்த ஒரு வேலைக்காரப் பெண்ணைப்பற்றிப் படித்தேன். அடிக்கடி கோபப்படும் வழக்கம் அவளிடத்திலிருந்தது. ஒரு நாள் நற்செய்தி கூட்டமொன்றில் பங்குபெற்றாள். அவளுடைய வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தாள். அவள் முற்றிலும் மாற்றப்பட்டாள்.
அவள் ஒரு நிறுவனத்தில் கிறிஸ்தவரல்லாத முதலாளியிடம் வேலை செய்தாள். அவர் கண்டிப்பான எஜமானனாகவும், எளிதில் மற்றவர்களுடைய தப்பிதங்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் கத்துவார். மேரியும் அவர்களைப்போல இருந்ததால் அவர் தப்பிதங்களை சொல்லும்போது பதிலுக்கு அவளும் கத்துவாள்.
ஆனால் அவள் கிறிஸ்தவளாக மாறின பின்பு, அவரிடம் கடுமையாக பதிலளிக்காமல் இருந்தாள். அவள் அவரைக் குறித்து முறுமுறுக்காமல், தன் இருதயத்தில் அமைதியாக ஜெபித்தாள். அவள் வாழ்க்கையின் மாற்றத்தைக் கண்ட அவளுடைய தோழி, ‘அந்த முதலாளி உன்னிடம் குற்றம் கண்டுபிடித்து கத்தும்போது இப்போது நீ ஏன் கடுமையாக பதிலளிப்பதில்லை?” என்று கேட்டாள். கடந்த காலத்தில் நானும் பதிலுக்குக் கத்துவேன் மற்றும் முறுமுறுப்பேன். நான் சமீபத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணித்தேன். ஆகவே முற்றிலும் மாற்றப்பட்டேன். அது ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் என்னுடைய நடத்தையையும், மனப்பான்மையையும் மாற்ற எனக்கு உதவிசெய்கிறார் என்று பதிலளித்தாள்.
இரட்சிக்கப்படும்போது எல்லா விசுவாசிகளும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். இது விசுவாசிகளுக்கு தேவன்கொடுக்கும் மிகப் பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. பரிசுத்த ஆவியானவர் விசுவாசிகளின் வாழ்க்கையில் பின்வருமாறு பங்காற்றுகிறார்.
1.உலக மக்களை பாவத்தைக் குறித்துக் கண்டித்து உணர்த்துகிறார்: ‘அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.” (யோவான் 16:8).
2.மறுபிறப்பால் மனிதரை மாற்றுகிறார்: ‘இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 3:5).
3.இரட்சிப்பை உறுதிப்படுத்தி முத்திரையிடுகிறார்: ‘நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சிகொடுக்கிறார்.” (ரோமர் 8:16). ‘நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத் தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.” (எபே 1:13).
4.தேவையான நேரங்களில் விசுவாசிகளையும், சபைகளையும் ஆறுதல் படுத்துகிறார்: ‘அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின.” (அப் 9:31)
5.இக்கட்டான சமயங்களில் உதவி செய்கிறார்: ‘ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.” (அப் 8:29).
6.விசுவாசிகளுக்குள் எப்பொழுதும் வாசம் செய்கிறார்: ‘அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” (ரோமர் 8:11).
7.விசுவாசிகளுக்கு வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையைக் கொடுக்கிறார்: ‘கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.” (ரோமர் 8:2-4).
8.விசுவாசிகளைத் தொடர்ந்து வழிநடத்துகிறார்: ‘சத்தியஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.” (யோவான் 16:13).
9.ஆவியின் கனியைக் கொடுக்க விசுவாசிகளைப் புதுப்பிக்கிறார்: ‘ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலா 5:22,23).
10.ஊழியம் செய்ய வல்லமையைத் தருகிறார்: ‘பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” (அப் 1:8).
(Dr. C Barnabas, Translated from True Discipleship November 1999)