இயேசு கிறிஸ்துவின் முன்னிருப்பு
- Published in Tamil Devotions
இயேசு கிறிஸ்து தெய்வம் என்றும் அவர் நித்தியமாக முன்பே இருந்தார் என்றும் வேதாகமம் போதிக்கிறது. ~யெகோவா சாட்சிகள்| போன்ற சில தவறான மத கொள்கைகள் இயேசு கிறிஸ்துவிற்கு ஆரம்பம் உண்டென்றும், அவர் முதலாவது படைக்கப்பட்டார் என்றும் போதிக்கின்றனர். அவர் தெய்வீகத் தன்மை உடையவர் என்றும் ஆனால் தெய்வம் அல்ல என்றும் கூறுகின்றனர். இயேசு கிறிஸ்து முன் இருந்தவர் என்பது அவர் முதலில் உருவாக்கப்பட்டார் என்றும் போதிக்கின்றனர். வேதாகமம் இயேசு கிறிஸ்து வின் முன்னிருப்பை மற்றும் நித்திய தன்மையைக் குறித்துப் போதிக்கும் போதனைகளை நாம் அறிந்துகொள்வோம்.
குமாரன் கொடுக்கப்பட்டார்: இயேசு கிறிஸ்து தெய்வமாகவும், மனிதனா கவும் இருந்தார்.மனிதனாக அவருக்கு ஒரு ஆரம்பம் இருந்தது. ஏசாயா அவருடைய பிறப்பை முன்னறிவித்தபோது ‘நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்” (ஏசாயா 9:6) என்று கூறுகிறார். இயேசு மனிதனாகப் பிறந்தார். அவர் தெய்வம் மற்றும் முன்பே இருந்தவர் என்பதால் அவர் கொடுக்கப்பட்டார் என்று கூறுகிறது.
குமாரன் அனுப்பப்பட்டார்: இயேசு கிறிஸ்து என்றென்றும் தேவனுடைய குமாரன். அவர் மனிதனை மீட்க பிறந்தார். ‘காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார்” (கலா 4:5) என்று இயேசு கிறிஸ்துவின் மனிதனாக வந்ததைக் குறித்து பவுல் கூறுகிறார். இங்கே அனுப்பினார் என்ற வார்த்தை இயேசு கிறிஸ்து முன்னமே இருந்தார் என்பதைக் குறிக்கிறது. ‘யோவான் 8:42ல் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்”, ‘அவரே என்னை அனுப்பினார்” என்று இயேசு கிறிஸ்து உறுதியாக அவர் முன்பே இருந்தவர் என்று கூறுகிறார். அவர் தேவனாக ஆராதிக்கப்பட்டதால் அவர் முன்பே இருந்தவர் என்ற உண்மை வெளிப்படுகிறது. (யோவான் 20:28, அப் 7:59,60, எபி 1:6).
ஆபிரகாமுக்கு முன்பே இருந்தவர்: இயேசு கிறிஸ்து யூதர்களிடம் வெளிப்படையாக ‘அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (யோவான் 8:58). இங்கு இயேசு கிறிஸ்து உடன் படிக்கையின் தேவனான ‘இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்றவருடன் சமமாக மட்டும் குறிப்பிடாமல், ஆபிரகாமுக்கு முன்பே இருக்கிறவர் என்று தைரியமாகக் கூறுகிறார். ஆண்டவரின் தூதனாகப் பழைய ஏற்பாட்டின் தோற்றங்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறிப்பது என்று வேத ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
உலகம் உண்டாவதற்கு முன்பே தேவனோடு இருந்தவர்: இயேசு கிறிஸ்து பிரதான ஆசாரிய ஜெபத்தில், உலகம் உண்டாகிறதற்கு முன்பே தேவனோடு இருந்ததாகக் கூறுகிறார் (யோவான் 17:5). இயேசு கிறிஸ்து இந்த உலகத் தைப் படைத்தார் என்று வேதாகமம் கூறுகிறது (யோவன் 1:3, கொலோ 1:16, எபி 1:10).
அப்போஸ்தலர்களால் அறிவிக்கப்பட்டது: இயேசு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் முந்தினவர் என்று பவுல் எழுதுகிறார் (கொலோ 1:17).
இயேசு கிறிஸ்து பூர்வகாலத்தில் இருந்தவர்: இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்று மீகா தீர்க்கதரிசனமாக அறிவித்தபோது, ‘அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது” (மீகா 5:2) என்று கூறியுள்ளார். இயேசு நித்தியமாய் வாழ்பவராகையால் அந்த பாலகன் ‘நித்திய பிதா” என்று ஏசாயா 6:9ல் அழைக்கப்பட்டார். அவர் நித்தியமானவர். பூமி உண்டாவ தற்கு முன்னும் இருந்தவர் (நீதி 8:22,23).
இயேசு நித்தியமாக இருப்பவர்: ‘ஆதியிலே வார்த்தை இருந்தது” என்று யோவான் எழுதின சுவிசேஷம் தொடங்குகிறது. வார்த்தை, இயேசு கிறிஸ்து எல்லாவற்றிற்கும் முன்பே நித்தியமாக இருந்தவர் என்பதை விளக்குகிறது. ‘அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது” என்று யோவான் கூறுகிறார். இயேசு பிதாவோடு ஒரு தனித்துவமான தெய்வீக உறவைக் கொண்டிருந்தார் என்று அர்த்தம்.
மேலும் யோவான் ‘அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்று எழுதுகிறார். அதாவது இயேசு தேவனாயிருந்தார் என்றும் கூறுகிறார். இறுதியிலே ‘அந்த வார்த்தை மாம்சமாகி” (யோவான் 1:14) என்று எழுதுகிறார். நித்திய மாயிருக்கிற குமாரன் மனிதன் ஆனார் என்று கூறுகிறார். ‘ஆதியும் அந்தமுமானவர்”, ‘அல்பாவும் ஒமேகாவும்”, ‘நித்திய பிதா”, ‘கிறிஸ்து”, ‘என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன்” போன்ற தலைப்புகள் அவருடைய நித்திய தன்மையைக் குறிக்கிறது.
இயேசு மனிதனாய் வருவதற்கு முன் தேவனுடைய ரூபமாயிருந்தார்: இயேசு கிறிஸ்து இந்த உலகில் பிறப்பதற்கு முன் தேவனுடைய ரூபமாயிருந்தார் என்று பிலி 2:6,7 கூறுகிறது.
தேவன் மாம்சத்திலே இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்டார்: இயேசு கிறிஸ்துவில் ‘தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்” என்று 1தீமோ 3:16 கூறுகிறது. மேலும் எபி 1:2,3, 13:8 ஆகிய வசனங்கள் அவருடைய நித்திய தன்மையை உறுதி செய்கிறது. இயேசு கிறிஸ்து தேவனுடைய குணாதி சயங்களான தம்மில் தானே ஜீவன் (யோவான் 5:26), மாறாத தன்மை (எபி 13:8), நித்தியம் (கொலோ 1:17, எபி 1:11), சர்வத்திலும் இருப்பவர் (மத் 28:20), எல்லாம் அறிந்தவர் (1கொரி 4:5, கொலோ 2:3), மற்றும் சர்வ வல்லமையுள்ளவர் (மத் 28:18). ஆகவே இயேசு தேவனுடைய குமாரன். ஆதியிலிருந்தே தேவனைப் போல இயேசுவும் தேவனுடைய குமாரன்.
வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து முன்னமே இருக்கிறார் என்பதும் நித்திய தன்மையைக் குறித்த தெளிவான போதனைகளை புரிந்து கொண்டால் நாம் தவறான போதனைகளைத் தவிர்த்து, இயேசு கிறிஸ்து வின் தெய்வத்துவத்தின் பிற நபர்களுடன் சமமாக இருக்கிறார் என்ற உண்மையை உறுதி செய்ய முடியும்.
(Dr. C Barnabas, Translated from True Discipleship Dec 1998)