இயேசுவின் மரணத்தின் நோக்கங்கள்
- Published in Tamil Devotions
நமது நாட்டின் சுதந்திரத்திற்காக மகாத்மா காந்தி, நமது தேசத்தின் தந்தை உண்ணாவிரதம் இருந்தார். ஒரு சில மிஷனெரிகள் அவரைக் காணச் சென்றனர். அவர்களை மரியாதையுடன் வரவேற்று, அவர் தேசத்தின் சுதந்தரத்திற்காகத் தியாகம் செய்த வேளையில் அவரைக் காண வந்ததை உணர்ந்து மகிழ்ந்தார்.
அந்த மிஷனெரிகள் அவருக்கு ஒரு பாடல் பாட வேண்டுமென்று விரும்பினார். ஆகவே அவர்களை ஒரு கிறிஸ்தவ பாடலை பாட வேண்டினார். ஒரு நொடி யோசித்த பின் அவர்கள், ‘எந்த கீர்த்தனையை நாங்கள் உமக்குப் பாட வேண்டும்?” என்று கேட்டனர். ‘கிறிஸ்தவத்தின் ஆழமான உண்மையை வெளிப்படுத்தும் கீர்த்தனையைப் பாடுங்கள்” என்று கூறினார். அவர்;கள் ஒரு நொடி யோசித்த பின், பின்வரும் கீர்த்தனையைப் பாடினார்கள்.
கிறிஸ்தவத்தின் ஆழமான உண்மையை இந்தக் கீர்த்தனை உண்மையாக வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம், கிறிஸ்தவத்தின் அடிப்படை மற்றும் முக்கியமான உண்மை ஆகும். நாம் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை ஏன் முக்கியமான உண்மையாகக் கருதுகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?
இயேசுவின் வாழ்க்கை மற்றும் மரணத்தின் முக்கிய நோக்கம், மனிதரின் பாவம் என்ற பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காகத்தான். மனிதன் பாவம் செய்து, தேவனின் கோபாக்கினையின் கீழ் இருக்கிறான். அவனுடைய பாவத்தில் அவன் சாக வேண்டும். அவனுடைய சொந்த முயற்சியால் அவனை மீட்க முடியாது. ஆகவே தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலக மக்களை மீட்க உலகத்திற்கு அனுப்பினார். இது உலக மக்கள் மீது உள்ள அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது. இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலமாக மனிதன் தேவனிடத்திற்கு மன்னிப்பிற்காகச் செல்ல வழிவகுத்தார்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நமது பாவங்களிலிருந்து கழுவி, நமக்கு நித்திய ஜீவனைத் தருகிறது. சிலுவையில் கிறிஸ்து நமக்காகச் செய்த வேலையை நாம் விசுவாசிக்கும்போது, நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கிறது.
இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் மரணத்தின் நோக்கங்களாகப் பின்வரு வதை வேதாகமம் கூறுகிறது.
1.பாவிகளை மீட்க:’இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.” (லூக்கா 19:10), ‘பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது” (1 தீமோத் 1:15)
2.சாத்தானின் கிரியைகளை ஒழிக்க:’ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத் தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் … அப்படியானார்” (எபி 2:14), ‘பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.” (1 யோவான் 3:8)
3.தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற:’நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங் களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.” (மத் 5:17)
4.தேவன் தம்மை மனிதனுக்கு வெளிப்படுத்த: ‘பூர்வகாலங்களில் பங்குபங்காக வும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்” (எபி 1:1)
5.நித்திய ஜீவன் அளிக்க:’நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.” (யோவான் 10:10), ‘நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை” (யோவான் 10:28), ‘கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதி யுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (1பேதுரு 3:18)
6.மனிதனை தேவனோடு ஒப்புரவாக்க:’பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்” (எபேசி 2:14-18), ‘நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோம்” (ரோமர் 5:10)
7.நமது பாவத்தை நிவிர்த்தி செய்ய: ‘அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக,…எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டி யதாயிருந்தது” (எபி 2:7)
8.மனிதனோடு புதிய உடன்படிக்கை செய்ய:’இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன்” (எரே 31:31), ‘இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்” (லூக்கா 22:19,20)
9.நமது பாவங்களுக்காக நமது இடத்தில் தன் ஜீவனைக் கொடுத்தார்: ‘மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்” (மத் 20:28), ‘நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக் கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவை யின்மேல் சுமந்தார்” (1பேதுரு 2:24), ‘கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்” (1பேதுரு 3:18)
10.தேவனுக்கும் நமக்கும் மத்தியஸ்தராக இருக்கிறார்: ‘இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்”(எபி 8:6),’புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்” (எபி 9:15), ‘புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும்” (எபி 12:24)
இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் உச்ச நோக்கம் மனிதனின் பாவ பிரச்சனைக்கு தீர்வு காண்பதே. பாவத்தின் சம்பளம் மரணம். இயேசு உன்னுடைய பாவத்தின் சம்பளத்திற்கு விலைக்கிரயம் செலுத்தினார். சிலுவையில் கிறிஸ்து முடித்த வேலையை நம்பி, மீட்கப்பட விரும்புகிறோமா? இது எப்படி நடக்கும் என்று நினைக்கலாம். நீதிமன்றத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வைத்து இதை விவரிக்க விரும்புகிறேன்.
ஒரு இளைஞர் ஒரு நீதிபதியின் முன் தான் செய்த குற்றத்திற்காக நிறுத்தப்பட்டான். அந்த குற்றவாளி, அந்த நீதிபதியின் பள்ளி கால நெருங்கிய நண்பர் என்று உணர்ந்த நீதிபதி தனது நண்பருக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருடைய நண்பர் குற்றவாளி என்று கண்டறிந்தார். சட்டத்தின்படி அவர் குற்றத்திற்காகத் தண்டனைபெற வேண்டும். நாட்டு சட்டத்தின்படி, அந்தக் குற்றத்திற்கு ஒரு தொகையை அபராதமாகச் செலுத்தும்படி தண்டனை விதித்தார். அந்தக் குற்றவாளி அபராதத்தைக் கட்டமுடியாததைத் தெரிவித்தார். நீதிபதி தன் நீதி இருக்கையை விட்டு எழுந்து அவருடைய நண்பனுக்கான அபராதத்தைக் கட்டி, அவரை விடுவித்தார். அதேபோல பாவம் செய்ததால், நீ தேவனுக்கு முன்பாக குற்ற உணர்வுடன் வருகிறாய். உன் பாவங் களுக்காகத் தண்டனையை நீ பெற வேண்டும். ஆகவே இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, உன்னுடைய இடத்தில், சிலுவையில் உன் பாவங்களுக்காக மரித்தார். உன் பாவத்தின் தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டதால், இரட்சிப்பு இலவசமாக உனக்குக் கொடுக்கப்படுகிறது. அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறார். அவராலேயல்லாமல் ஓருவனும் பிதாவினிடத்திற்கு வரான். (யோவான் 14:6). ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நம்பிக்கையைக் கிறிஸ்து வின் மீது வைத்து, பாவத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களைப் போல நீயும் உனது நம்பிக்கையை உண்மையான வழியாகிய இயேசுகிறிஸ்துவின் மேல் வைத்து, பின்வரும் ஜெபத்தை செய்வாயாக.
“ஆண்டவராகிய இயேசுவே, நான் பாவம் செய்து, கட்டளைகளை மீறியுள்ளேன். நான் தேவனுடைய கோபாக்கினையின் கீழ், நரகத்திற்குச் செல்ல வேண்டும். நீர் தேவனுடைய குமாரன், எனது இடத்தில் என் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தீர். எனது மீட்பிற்கான விலைக்கிரயத்தை நீர் செலுத்தினீர். என் பாவத்திலிருந்து என்னை நீர் மீட்க முடியும் என்று அறிக்கையிடுகிறேன். பாவியாகிய என்மீது கிருபையாய் இரும். என்னுடைய பாவங்களை மன்னித்து என்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும். ஆமென்.